சென்னை மாநகராட்சியில் தலைமை பொறியாளர்களின் துறைகளை மாற்றி உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சியில் தலைமை பொறியாளர்களுக்கு துறைகள் மாற்றம் செய்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட உத்தரவில்: சென்னை மாநகராட்சியில், தலைமை பொறியாளர்களுக்கு துறைகள் மாற்றப்பட்டுள்ளன. மேலும் பொது தலைமை பொறியாளராக ராஜேந்திரனை நியமித்து மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.  இதில் மழைநீர் வடிகால் துறையில் தலைமை பொறியாளர், செயற்பொறியாளர்கள் மற்ற துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தபின் இரண்டாவது முறையாக தலைமை பொறியாளர்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளது.

 அதன்படி என்.மகேசன்  திடக்கழிவு மேலாண்மை பிரிவை மட்டும் கவனித்து வந்தார். தற்போது அந்த துறையுடன், மெக்கானிக்கல், சிறப்பு திட்டம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி ஆகிய துறைகளை கவனிப்பார். சாலை மற்றும் பாலங்கள் துறையை கவனித்து வந்த தலைமை பொறியாளர் எஸ்.ராஜேந்திரன், இனி, பொதுப் பிரிவு மற்றும் சாலைகள், உட்புற சாலைகள், மழைநீர் வடிகால், தலைமை பொறியாளர்கள் ஒருங்கிணைப்பு, சிங்கார சென்னை 2.0 மற்றும் அனைத்து அரசு அறிவிப்புகள் ஆகியவற்றை கவனிப்பார். பூங்காக்களை கவனித்து வந்த, எஸ்.காளிமுத்து, இனி கட்டிடம், மயான பூமி மற்றும் பொது கழிப்பறை, தர கட்டுப்பாடு, பாலங்கள் துறையை கவனிப்பார்.

தலைமை பொறியாளர் பொதுத்துறையை கவனித்து வந்த எல்.நந்தகுமார் இனி பூங்கா, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, பேரிடர் மேலாண்மை, நமக்கு நாமே திட்டம், நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் ஆகிய துறைகளை கவனிப்பார். திட்டமிடல் துறையை கவனித்து வந்த பி.துரைசாமி, இனி திட்டமிடல் துறையுடன் சேர்த்து,  மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், புவிசார் குறியீடு, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், நகரமைப்பு ஆகியவற்றை கவனிப்பார்.  மேலும் செயற்பொறியாளர் சி.திருநாவுகரசன், மழைநீர் வடிகால் பிரிவை கவனித்து வந்தார், இனி வடக்கு மண்டல துணை கமிஷனராகவும், மழைநீர் வடிகால் பிரிவை கவனித்து வந்த நிர்மலா, தலைமை அலுவலக கட்டிடத்துறைக்கும் மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: