‘மின்னகம்’ மின்நுகர்வோர் சேவை மையம் திறக்கப்பட்டு 100 நாளில் 3.50 லட்சம் புகார்களுக்கு தீர்வு: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மின்னகம் (மின் நுகர்வோர் சேவை மையம்)  திறக்கப்பட்டு 100 நாள் நிறைவடைந்ததையொட்டி, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று நேரடியாக ஆய்வு செய்தார். அவருடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் சண்முகம், இயக்குநர்/பகிர்மானம் சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

பிறகு அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த பேட்டி: தமிழகத்தில் இருக்கக்கூடிய 3.16 கோடி மின் நுகர்வோர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கிடும் சீரிய நோக்கத்தோடு மின்னகத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். 100 நாளை கடந்து மின்னகம் பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. இதுவரை வந்த 3.56 லட்சம் புகார்களில், 3.50 லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. மின்னகத்தின் மூலம் பயன் அடைந்தவர்கள் சொல்லும் வார்த்தைகளை நாங்கள் கேட்கும்போது அது எங்களை இன்னும் வேகப்படுத்துகிறது. 100 நாட்களில் ஒரு சாதனையை மின்சார வாரியம் செய்திருக்கிறது. மின்சார வாரியம் சிறப்பாக செயல்படுகிறது. முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி மின்சார வாரியத்தை மேம்படுத்தி, வடிவமைத்து மின் நுகர்வோர்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவோம், வழங்கிக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: