3 முகாம்களிலும் சாரைசாரையாக வந்து குவிந்து தடுப்பூசி திருவிழாவாகவே நடத்திய பொதுமக்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: செப்டம்பர் 12ம் தேதி 40 ஆயிரம் முகாம்கள் மூலம் 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. 16 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் இருந்ததை வைத்து, இரண்டாவது வாரமே செப்டம்பர் 19ம் தேதி 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம்களில் 16 லட்சத்து 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முதல்வர், பிரதமருக்கு தமிழகத்திற்கு வாரத்திற்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும் என்று கடிதம் எழுதியதின் வாயிலாக 28 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்தது. இவை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு, மூன்றாவது கொரோனா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடந்தது. 23 ஆயிரம் முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அது 24 லட்சம்  93 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் 3 லட்சம் அளவுக்கு உள்ளது. நான் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளரும், ஒன்றிய அரசின் உயர் அலுவலர்களுடன் தடுப்பூசிகள் குறித்து பேச இருக்கிறோம். முதல்வரின் கோரிக்கையான வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் என்ற இலக்கை ஒன்றிய அரசு நிறைவேற்றுமானால், இந்த வாரமும் நான்காவது மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும். தடுப்பூசி செலுத்துவதற்கு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. நடைபெற்ற மூன்று மாபெரும் தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் சாரைசாரையாக வந்து தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டு, அதை ஒரு தடுப்பூசி திருவிழாவாகவே நடத்தினர். 12 மணிக்கெல்லாம் நிர்ணயித்த இலக்கைக் கடந்து, தடுப்பூசிகள் போதவில்லை என்ற நிலை தான் ஏற்படுகிறது. யாரையும் கட்டாயப்படுத்தி தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ள சொல்லவில்லை. அப்படியே சொன்னாலும் அதில் தவறொன்றுமில்லை.

Related Stories: