மாநில நிதியமைச்சர்கள் கொண்ட ஜிஎஸ்டி சீர்திருத்த குழு அமைப்பு: பழனிவேல் தியாகராஜனும் இடம்பெற்றார்

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்கப்பட்ட பொருட்களை மதிப்பாய்வு செய்வதற்காக மாநில நிதியமைச்சர்கள் கொண்ட இரண்டு சீர்திருத்த குழுக்களை ஒன்றிய நிதியமைச்சகம் உருவாக்கியுள்ளது. இதில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் இடம்பெற்றுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் கடந்த 17ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் குறித்து மதிப்பாய்வு செய்வதற்காக சீர்திருத்த குழு அமைப்பது என முடிவு செய்யபட்டது. இதனை தொடர்ந்து ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாநில நிதியமைச்சர்களை கொண்ட 2 ஜிஎஸ்டி சீர்திருத்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

7 பேர் கொண்ட குழுவில் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை தலைவராக இருப்பார். இந்த குழுவில் மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா, கேரள நிதியமைச்சர் கேஎன் பாலகோபால், பீகார் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத் ஆகியோர் இடம்பெற்று இருப்பார்கள். இதேபோல் 8 பேர் கொண்ட குழுவில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் சட்டீஸ்கர் நிதியமைச்சர் சிங் தியோ உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய வரி விலக்கு மற்றும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் பட்டியலை இக்குழு மதிப்பாய்வு செய்யும். தகவல் தொழில்நுட்ப ரீதியில் ஜிஎஸ்டி வரிவசூலில் உள்ள சிக்கல்களை சரிசெய்வது குறித்தும் இந்த குழு பரிந்துரை செய்யும். வரி ஏய்ப்பு நடைபெறுவதற்கான வழிகளை கண்டறிவது, வருவாய் இழப்பை தடுப்பதற்கான மாற்றங்களையும் குழு பரிந்துரை செய்யும். 7 பேர் கொண்ட சீர்திருத்த குழுவானது 2 மாதங்களில் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: