புலியை பிடிக்கும் வரை மக்கள் வெளியே வரக்கூடாது; பஸ்கள் இயக்க தடை: நீலகிரி கலெக்டர் உத்தரவு

கூடலூர்: வனத்துறை கண்காணிப்பை மீறி நேற்று ஆட்டை அடித்து கொன்ற புலியை பிடிக்கும் வரை மக்கள் வெளியே வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது தேவன் எஸ்டேட். இந்த பகுதியை சேர்ந்தவர் தோட்ட தொழிலாளி சந்திரன் (52). இவர் கடந்த 24ம் தேதி ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது இவரை புலி அடித்து கொன்றது. புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதாக உறுதியளித்தனர்.

புலி நடமாடும் பகுதியில் கூண்டு மற்றும் கேமராக்கள் வைக்கப்பட்டன. முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தலைமையில் வனத்துறையினர் புலியை மயக்க ஊசி போட்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராட்சத மரங்களில் பரண் அமைத்து கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் மேய்ந்த ஒரு பசு மாட்டை, புலி தாக்கி கொன்றது. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பையும் மீறி ஊருக்குள் புகுந்து மாட்டை, புலி கொன்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மேலும் பீதியை ஏற்படுத்தியது.

இதையடுத்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர், வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பொதுமக்களை அச்சுறுத்தும் புலியை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். வனத்துறையினர் கூண்டு மற்றும் கேமரா பொருத்தி இரவும், பகலும் கண்காணித்து வருகின்றனர். மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் கால்நடை மருத்துவக்குழுவினர் தயாராக உள்ளனர். இருப்பினும், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் புலியை பிடிப்பதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புலி பிடிபடும்வரை பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளியூர் மக்கள் வரக்கூடாது என்பதிற்காக பஸ்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வீடு தேடி வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் புலி பிடிபடும். பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை’’ என்றார். கலெக்டரின் உத்தரவையடுத்து பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வனத்துறை, காவல்துறை ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: