நாட்டின் ஏற்றுமதியில் தமிழகம் 3வது இடம்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்

சென்னை: ஒன்றிய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் சார்பில், தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் வளாகத்தில், வர்த்தக வாரவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ஒன்றிய மீன்வளம், கால்நடைத்துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று பேசியதாவது: கால்நடை மற்றும் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதிக்கு இந்தியாவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்திய வேளாண் ஏற்றுமதியில் 17 முதல் 18 சதவீதம் வரை கடல்சார் ஏற்றுமதியின் பங்களிப்பு அடங்கியுள்ளது. உள்ளூர் தொழில்களை மேம்படுத்தும் வகையில், ஒன்றிய அரசு சுயசார்பு பாரதம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடல்சார் ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு 50 சதவீதம் மானியம் வழங்குகிறது.

கால்நடை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, கால்நடை நோய்கள் கட்டுப்பாட்டு திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு லட்சம் கால்நடைகள் கொண்ட பகுதிகளில் நடமாடும் கால்நடை மருத்துவ கிளினிங் இயங்க ஒன்றிய அரசு உதவுகிறது. சென்னையில் இருந்து கார் மற்றும் உதிரி பாகங்களும், நாமக்கல் பகுதியில் கால்நடை சார்ந்த பொருட்களும், தூத்துக்குடியில் இருந்து கடல்சார் பொருட்களும் அதிகளவில் ஏற்றுமதி ஆகின்றன. ஏற்றுமதியில் இந்திய அளவில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக்கு ஒன்றிய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதனால் மீனவ பெண்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், விவசாய உற்பத்தியாளர் குழு ஆகியோர் பெரிதும் பயன்பெறுவர். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பொருளாதார மண்டல மேம்பாட்டு அதிகாரி சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: