ஐஏஎஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி; மாற்றுத்திறனாளி சாதனை: தமிழிலேயே எழுதி 750வது இடம் பிடித்தார்

சென்னை: ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழிலேயே எழுதி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று இந்தியாவிலேயே 750வது இடத்தை பிடித்து கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி சாதனை படைத்துள்ளார். கோவை பீளமேட்டை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவர் சித்தோடு ஆவின் நிலையத்தில் துணை மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அமிர்தவள்ளி. தனியார் பள்ளி தலைமை ஆசிரியை. இவர்களுக்கு அருண்பிரசாத், ரஞ்சித் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அருண்பிரசாத் சென்னையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

இளைய மகன் ரஞ்சித் பேச்சு மற்றும் கேட்கும் திறன் குறைந்த மாற்றுத்திறனாளி ஆவார். இவர் தற்போது நடைபெற்ற ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 750வது இடத்தை பெற்று தேர்ச்சி  பெற்றுள்ளார். இது குறித்து அவரது தாய் அமிர்தவள்ளி கூறியதாவது:- கோவை பீளமேட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். சொந்த ஊரான ஈரோட்டில் இருந்து கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மகன்களின் படிப்புக்காக கோவை வந்தோம். மூத்த மகன் டாக்டராக உள்ளார்.

இளைய மகன் ரஞ்சித் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 2016ம் ஆண்டு பிஇ மெக்கானிக்கல் படிப்பை முடித்தார். அவருக்கு சிவில் சர்வீஸ் தேர்வு எழுத ஆர்வம் ஏற்பட்டது. எனவே அவர் படித்த தனியார் கல்லூரி தமிழ் பேராசிரியர் பாரதி அவருக்கு வகுப்பு எடுத்தார். முதல் முயற்சியிலேயே தமிழ் மொழியில் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: