9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு

* 24 மணி நேரமும் இயங்கும் புகார் மையம்

* மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை:  9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இத்தேர்தலுக்காக மொத்தம் 97,831 பேர் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர். அதாவது கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 72,071 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 15,967 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 8,671 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,122 பேரும் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர். மேலும் 28 மாவட்டங்களில்  காலியாக உள்ள 186  பதவிகளுக்கு மொத்தம் 2547 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த  மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது. இதில் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அனைத்து தகுதிகளும் இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது. வேட்புனு தாக்கல் செய்தவர்கள் வேட்புமனுவை திரும்ப பெற இன்று கடைசி நாளாகும். தொடர்ந்து இன்று மாலையே வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

அப்போது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தவிர மற்ற கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதும் வேட்பாளர்களின் பிரசாரம் மேலும் சூடுபிடிக்க தொடங்கும். ஒவ்வொரும் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்குகளை திரட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதே நேரத்தில் அரசியல் கட்சி தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேரிக்க உள்ளனர். இதனால், வரும் நாட்களில் தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கும். தொடர்ந்து அக்டோபர் 6ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறும். அக்டோபர் 9ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும். இரண்டு கட்டங்களில் பதிவான வாக்குகள் 12ம் தேதி எண்ணப்படும். அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு:தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்களிடமிருந்து புகார்கள் ஏதுவும் இருந்தால் அதனை பெறுவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தின் தரைத்தளத்தில் 24 மணி நேரமும் இயங்கும் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மையம் கடந்த 15ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த புகார் மையத்தில் 24ம் தேதி(நேற்று) வரை 285 புகார்கள் வரப்பெற்றுள்ளன. இந்த புகார்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு உரிய விளக்கங்கள், தகவல்கள், தெளிவுரைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. புகார்களின் தன்மைக்கேற்ப அவை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சி தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக ஆய்வு செய்து புகார்களின் உண்மைத்தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நடவடிக்கைகள் முடிவு பெறும் வரை இப்புகார் மையம் தொடர்ந்து இயங்கும். புகார் மையத்தின் 18004257072, 18004257073, 18004257074 என்ற எண்ணில் புகார்களை தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>