கூடலூர் அருகே மக்கள் போராட்டம் எதிரொலி: அட்டகாச புலியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது..! வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கூடலூர்: மாடுகளை  அடித்து கொல்லும் புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரி கூடலூர் அருகே கிராம  மக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து புலியை பிடிக்க இன்று  கூண்டு வைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த மதுரை  ஊராட்சி, அம்பலமூல பகுதியில் கடந்த 18ம் தேதி ஒரு புலி, மாட்டை அடித்து  கொன்றது. புலியை பிடிக்க கூண்டு வைக்க கோரி வனத்துறையினரை பொதுமக்கள்  சிறைபிடித்தனர். அவர்கள், 2 நாள் அவகாசம் கேட்ட நிலையில் நேற்று முன்தினம்  இரவு மீண்டும் சேமுண்டி பகுதியில் ஒரு கன்று குட்டியை புலி அடித்து கொன்று,  ஒரு கி.மீ. தூரம் இழுத்து சென்றது. புலி தாக்கி இறந்த பசு கன்றுடன்  கூடலூர் கோட்ட வன அலுவலகம் முன்பு நேற்று கிராம மக்கள் கண்டன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கூடலூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில்  வனத்துறை அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் உதவி வன  பாதுகாவலர் மற்றும் கூடலூர் ஆர்டிஓ சரவண கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.  அதை ஏற்க மறுத்து, மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் முதுமலை புலிகள் காப்பக  எல்லைப்பகுதியான தொரப்பள்ளி வனத்துறை சோதனைச்சாவடி முன்பு மீண்டும்  மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக ஊட்டியிலிருந்து புலிகள் காப்பக கள  இயக்குனர் வெங்கடேஷ், கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம், ஊட்டி  டிஎப்ஓ போஸ்லே சச்சின் துர்காராம், கூடலூர் ஆர்டிஓ சரவணகண்ணன், தாசில்தார்  கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் கோட்ட வன அலுவலர் அலுவலகத்தில்  பேச்சுவார்த்தை நடந்தது.

கிராம மக்கள் சார்பில் எம்எல்ஏ பொன் ஜெயசீலன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  அப்போது, புலிகள் காப்பக கள இயக்குனர்  வெங்கடேஷ், புலியை பிடிக்க கூண்டு வைக்கும் நடவடிக்கை இன்று துவங்கும்.  விநாயகன் யானையை அப்பகுதியிலிருந்து விரட்டுவதற்கும், வன எல்லைப்பகுதியில்  கண்காணிப்பதற்கும் முதுமலையில் இருந்து கும்கி யானைகளை வரவழைக்க நடவடிக்கை  எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டம் விலக்கி  கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்றிரவு அம்பலமூல பகுதிக்கு கூண்டு  கொண்டு செல்லப்பட்டு, இன்று அதிகாலை கிராமத்தில் வைக்கப்பட்டது. கூண்டில்,  ஏற்கனவே புலி தாக்கி இறந்த கன்று குட்டியின் உடலை வைத்து வனத்துறையினர்  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: