சமுதாய வளைகாப்பு விழா 100 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை: அமைச்சர் ஆவடி நாசர் வழங்கினார்

ஆவடி: திருவள்ளூர் மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை சார்பில் ஆவடியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் 100கர்ப்பிணிகளுக்கு 5வகை உணவு, சீர்வரிசைகளை பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கி வாழ்த்தினார். திருவள்ளூர் மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஆவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு அங்கன்வாடி பணியாளர்கள் அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய உணவு திருவிழாவை பார்வையிட்டு திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணியாளர்கள் உள்ளிட்டோர் ஊட்டச்சத்து உறுதிமொழி ஏற்றனர். மேலும், தொடர்ந்து மருத்துவரின் ஆலோசனைப்படி கொரோனா தடுப்பூசிகள் எடுத்துக்கொள்ள விருப்பமுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதன்பிறகு, கர்ப்பிணி பெண்களுக்கு பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ஐந்து வகை உணவுகள் வழங்கப்பட்டது. பின்னர், 100 கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசின் சார்பாக சீர்வரிசைகளை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் வழங்கி வாழ்த்தினார்.

பின்னர், அவர் பேசியதாவது:-  கர்ப்ப காலத்தில், கர்ப்பிணி பெண்கள் உணவு முறையில் கட்டுக்கோப்புடன் இருந்து ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்ளுவதால், கர்ப்பிணிப் பெண்களும்,  கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். பிறக்கும் குழந்தைகள் ஒட்டுமொத்த உடல் கூறுகளும் வலிமை பெற்று அறிவுத்திறனில் சிறந்து வேண்டுமாயின், இப்பொழுதிலிருந்தே ஊட்டச்சத்தான உணவுகளை கர்ப்பிணிகள் உட்கொள்ள வேண்டும். அதற்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் மூலமாக ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுகிறது.

ஏழை-எளிய கர்ப்பிணி தாய்மார்களுக்கு தமிழக அரசியல் கவுரவிக்கும் வகையில் ஊட்டச்சத்து உணவு வழங்கும் வகையிலும், கர்ப்பிணி காலத்தில் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் சமுதாய வளைகாப்பு விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டுள்ள அன்பு சகோதரிகள் நல்ல முறையில் குழந்தை பெற்றெடுத்து நல்ல சமுதாயத்தை உருவாக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட கலெக்டர் ஜான் வர்கீஸ், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, பூந்தமல்லி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜேஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரதீபா, சுகாதார அலுவலர் டாக்டர் அசிம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம் சூளைமேனி கிராமத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திட்ட அலுவலர் ராசாத்தி தலைமை தாங்கினார். மேற்பார்வையாளர்கள் செல்வி, ரேணுகாதேவி,  எல்லாபுரம் வட்டார ஒருங்கிணைப்பாளர் துளசிராமன், திட்ட உதவியாளர் சுதா, அங்கன்வாடி ஆசிரியை நிரோஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சரவணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ஒன்றிய குழு தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் வித்யாலட்சுமி வேதகிரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சாந்தி காளிதாஸ், நெப்போலியன் ஆகியோர் கர்ப்பிணி பெண்களுக்கு மாலை அணிவித்து வளையல், வரிசை தட்டு, மஞ்சள், குங்குமம் போன்ற சீர்வரிசைகளை வழங்கினர்.

Related Stories: