மதுரை ரயில்வே கோட்டத்துடன் பொள்ளாச்சியை இணைக்க வேண்டும்: கிணத்துக்கடவு எம்எல்ஏ., கோரிக்கை

பொள்ளாச்சி:  கிணத்துக்கடவு எம்எல்ஏ., தாமோதரன், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: ‘கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் ஏராளமான தொழிற்சாலை, பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படுகிறது. இப்பகுதியில் உள்ள மக்கள், பல்வேறு பணிக்காக வெளியூர்களுக்கு செல்ல கிணத்துக்கடவு வழியாக செல்லும் ரயில்களையே அதிகம் நம்பியுள்ளனர்.   போத்தனூர்-பொள்ளாச்சி ரயில்வே பாதை, மீட்டர் கேஜ் பாதையிலிருந்து அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளதால், போத்தனூர்-பொள்ளாச்சி வழியாக விரைவு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது, போத்தனூரில் இருந்து கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக இயக்கப்பட்ட ராமேஷ்வரம், தூத்துக்குடி, மதுரை, கெல்லம் ஆகிய ரயில்களை உடனே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள், அரசு பணியாளர்களின் நலன்கருதி பொள்ளாச்சியிருந்து கிணத்துக்கடவு, கோவை வழியாக மேட்டுப்பாளையம் பாதையில் மின்சார ரயில் இயக்க வேண்டும்.

பாலக்காடு கோட்டத்துடன் உள்ள பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனை, மதுரை கோட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும்’. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: