தேசிய பாதுகாப்பு அகாடமியில் இந்த ஆண்டே பெண்களை சேர்க்க வேண்டும் : ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:தேசிய பாதுகாப்பு அகாடமியில் இந்த ஆண்டே பெண்களை சேர்க்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு அகாடமி அமைப்பான என்டிஏவில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் பெண்கள் கலந்து கொள்வதற்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்திருந்தது. இந்த தேர்வு ஆண்களுக்கு மட்டுமே என்றும் பாதுகாப்பு துறை அமைச்சகமும் தெரிவித்திருந்தது. இதனால் என்டிஏவில் திருமணம் ஆகாதா ஆண்கள் மட்டுமே சேர்ந்து பயிற்சி பெற முடியும் என்ற நிலை இருந்து வந்தது. இது பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்கை முடிவு என்றும் ஒன்றிய அரசு தெரிவித்திருந்து.

இதையடுத்து இந்த முடிவுக்கு எதிராக குஷ் கால்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்து இருந்தார்.அதில், என்டிஏ தேர்வில் பெண்களும் கலந்துகொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரிர்க்ரக் நீதிமன்றம் அரசின் இந்த கொள்கை முடிவு என்பது பாலின பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதனால் தேசிய பாதுகாப்பு அகாடமியின் என்டிஏ நுழைவு தேர்வை பெண்களும் எழுத அனுமதி அளிக்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அதே நேரத்தில் இந்த ஆண்டு நடைபெறும் தேர்வில் பெண்களை அனுமதிப்பது என்பது சற்று சிரமமான காரியம். மேலும் இது தொடர்பான புதிய விதிமுறைகளை உருவாக்க அரசுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது ஒன்றிய அரசு தரப்பில் கடந்த 8ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மேற்கண்ட விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தது. அதில்,அடுத்த ஆண்டு முதல் அதாவது 2022ல் இருந்து தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களும் சேர்க்கப்படுவார்கள். இதற்கான நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பாணை வரும் ஆண்டு மே மாதம் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது  மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அமர்வில்விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தேசிய பாதுகாப்பு அகாடமியில் அடுத்த ஆண்டு முதல் பெண்களை சேர்க்க முடியும் என்ற ஒன்றிய அரசின் பிரமாணப் பத்திரத்தை நிராகரிக்கிறோம். தேசிய பாதுகாப்பு அகாடமியின் இந்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு நவம்பர் மாதம் தான் நடைபெற உள்ளது. அதனால் தேசிய பாதுகாப்பு அகாடமியில் இந்த ஆண்டே பெண்களை அனுமதிக்க வேண்டும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் இந்த ஆண்டே பெண்களை சேர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டனர்.

 

Related Stories:

>