15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் போக்சோ வழக்கு ரத்து கோரி அதிமுக மாஜி எம்எல்ஏ மனு

மதுரை: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் அதிமுக மாஜி எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன். அப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட பலர், கடந்த 2017 முதல் தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறியதையடுத்து போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிந்து நாஞ்சில் முருகேசனை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தனக்கு எதிரான போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி நாஞ்சில் முருகேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.

அதில், ‘‘சம்பவம் நடந்ததாக கூறப்படும் நேரத்தில் யாரும் புகார் அளிக்கவில்லை. வேண்டுமென்றே அரசியல் காரணங்களுக்காக புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் கடந்தாண்டு வழக்கு பதிந்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை நாகர்கோவில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். என் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.இளங்கோவன், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக். 28க்கு தள்ளி வைத்தார்.

Related Stories: