ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து தமிழகத்தில் திமுக, கூட்டணி கட்சியினர் போராட்டம்: கே.எஸ்.அழகிரி, வைகோ, பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், உதயநிதி பங்கேற்பு

சென்னை: ஒன்றிய அரசின், மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில், நேற்று கண்டனப் போராட்டம் நடந்தது. 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல்- டீசல்-சமையல் எரிவாயு விலை உயர்வு தொடருவது, விலைவாசி உயர்வு, தனியார்மயமாக்கல், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது உள்ளிட்ட ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து  தமிழகம் முழுவதும் நேற்று காலை திமுக மற்றும் கூட்டணி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும், தங்களின் இல்லங்களின் முன்பாக கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞரணியின் தலைமை அலுவலகமான அன்பகம் முன்பு, திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் மாவட்டச் செயலாளர் மயிலை வேலு எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஆர்.டி.சேகர், ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிஐடி காலனியில் உள்ள தனது இல்லத்தின் முன்பாக கருப்புக் கொடி ஏந்தி கண்டன போராட்டத்தில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி ஈடுபட்டார். ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் வீட்டில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது.

சென்னை அண்ணா அறிவாலயம் முன்பு எம்பிக்கள் ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, எழிலன் எம்எல்ஏ, பூச்சி முருகன், துறைமுகம் காஜா, முன்னாள் எம்எல்ஏ ரவிச்சந்திரன், பகுதி செயலாளர் மா.பா.அன்புதுரை, பொதுக்குழு உறுப்பினர் வி.எஸ்.ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்திபவன் முன்பு கருப்பு கொடி ஏந்தி ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதில், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, ஜெயக்குமார் எம்பி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை, துணை தலைவர் கோபண்ணா, ஹசன் மவுலானா எம்எல்ஏ, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், ரஞ்சன் குமார், முத்தழகன், நாஞ்சில் பிரசாத், அடையார் துரை, டில்லிபாபு, தகவல் அறியும் உரிமை பிரிவு மாநில துணை தலைவர் மயிலை தரணி, மகளிர் அணி துணை தலைவர் ஆர்.மலர்கொடி, மாநில செயலாளர் சுமதி அன்பரசு, திருவான்மியூர் மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அண்ணாநகரில் உள்ள அவரது வீடு முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் மாவட்டச் செயலாளர் கழக குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அசோக்நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, வன்னியரசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில், பெரியார் திடல் நுழைவு வாயில் முன்பு போராட்டம் நடைபெற்றது.

இதில் திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பேராசிரியர் மங்கள முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன்,  மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.பத்ரி, வெ.ராஜசேகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்பி, அண்ணாநகரில் உள்ள தனது இல்லத்தின் முன்பு கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இதில் முன்னாள் மாவட்ட தலைவர் அரும்பாக்கம் வீரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஓசூரில் பொதுச்செயலாளர் டி.ராஜா தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மாநிலத் துணைச் செயலாளர்கள் கே.சுப்பராயன் எம்.பி., மு.வீரபாண்டியன், எம்.செல்வராஜ் எம்.பி.  தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் நா.பெரியசாமி,பி.பத்மாவதி, ந.நஞ்சப்பன், க.சந்தானம், பொருளார் எம்.ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ராமச்சந்திரன், க.மாரிமுத்து,முத்த தலைவர் எம்.இலகுமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர்  ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திமுக கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: