கிணற்றுக்குள் விழுந்து விடிய, விடிய தவித்த தொழிலாளி-10 மணி நேரத்திற்கு பின்பு மீட்பு

பள்ளிபாளையம் : திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ்(22). கூலி தொழிலாளியான இவர், பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் அறை எடுத்து தங்கி, அருகில் உள்ள நூற்பாலையில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில், அருகில் உள்ள விவசாய கிணற்று மேட்டிற்கு சென்ற பாக்கியராஜ் தனது குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக கால் தவறி 100 அடி கிணற்றில் விழுந்து விட்டார். அந்த கிணற்றில் 40 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்தது. இதனால், கிணற்றுக்குள் இருந்த ஒரு கல்லை பிடித்துக்கொண்டு அபயக்குரல் எழுப்பியுள்ளார். இரவு நேரம் என்பதால் ஒருவரும் உதவிக்கு வரவில்லை. இதையடுத்து, கல்லின் மீது ஏறி அமர்ந்து கொண்டு விடிய, விடிய சத்தம் போட்டபடியே காத்திருந்தார். நேற்று காலை 8 மணியளவில், அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றுக்குள் பாக்கியராஜ் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். தகவலின்பேரில், வெப்படை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்று கயிறு கட்டி பாக்கியராஜை பத்திரமாக மீட்டனர். பின்னர், பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Related Stories: