வாணியம்பாடி அருகே சுடுகாட்டுக்கு வழி கேட்டு சடலத்துடன் பொதுமக்கள் மறியல்-அதிகாரிகள் சமரசம்

வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே சுடுகாட்டுக்கு வழி கேட்டு சடலத்துடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.  வாணியம்பாடி தாலுகா, அம்பலூர் அடுத்த புல்லூர்- மோட்டூர் கிராமத்தில் உள்ள  அருந்ததியர் காலனியில் வசித்து வந்த  கோவிந்தராஜ் (65) என்பவர் உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய வழக்கம்போல் பாலாற்றின் வழியே எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர்,  அப்போது பாலாற்றில் நேற்றுமுன்தினம் பெய்த கன மழையால் ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் வேறு வழியின்றி அருகில் உள்ள நிலத்தின் வழியாக எடுத்துச் செல்வதற்காக கேட்டுள்ளனர்.  

ஆனால் அதன் உரிமையாளர் மறுக்கவே அந்த வழியே சடலத்தை நடுரோட்டில் வைத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பட்டா நிலத்தின் வழியாக செல்ல அனுமதிக்காதது குறித்து பட்டாதாரர்களிடம் அம்பலூர்  வருவாய் ஆய்வாளர் சித்ரா தலைமையில் வருவாய்த்துறை மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில்  உடன்பாடு எட்டப்பட்டதால், இந்த ஒரு முறை மட்டும் நிலத்தின் வழியாக இறந்தவரின் உடலை கொண்டு செல்ல அனுமதி அளித்தனர். இதனை அடுத்து இறந்த நபரின் உடல் எவ்வித பிரச்னையுமின்றி கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனால் 2 மணி நேர போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: