வாணியம்பாடியில் ஆக்கிரமிப்புகளால் பாலாற்றின் கிளை ஆறு காணாமல் போகும் அவலம்: நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

வாணியம்பாடி:  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பாலாற்றின் கிளை ஆறு நீண்டு செல்கிறது. இந்த பாலாற்றின் கிளை ஆற்றை சமூக விரோதிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும் பாலாறு கிளை ஆற்றில் அதிக அளவில் கோழி இறைச்சிக் கழிவுகள், மருத்துவ கழிவுகள் மற்றும் இதர கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் ₹200 கோடி செலவில் பாலாற்றின் கிளை ஆறு ஒட்டி கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்காக அப்போதைய வாணியம்பாடி எம்எல்ஏவும், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த நிலோபர் கபில் மற்றும் அப்போதைய கலெக்டர் சிவன் அருள் ஆகியோரால் பூமி பூஜை போடப்பட்டு கழிவு நீர் கால்வாய்களை கட்டுவதற்காக பள்ளம் தோண்டினர். பின்னர் அப்பகுதியில் இருக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் அடிப்படையில் பணிகள் நிறுத்தப்பட்டன. மேலும் மழைக்காலங்களில் அந்தப் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், அருகில் உள்ள வீடுகள் இடிந்து விழும் அபாய நிலை ஏற்படுவதாத கூறி பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.  

இதையடுத்து உடனடியாக  அப்போதைய மாவட்ட கலெக்டர் சிவன்அருள் வருவாய்த் துறையினரை ஆய்வு செய்ய அனுப்பினார். அதன் அடிப்படையில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி சம்பவ இடத்திற்கு சென்று அதனை உடனடியாக மூட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் தற்போது பாலாற்றின் கிளை ஆறு மூடப்பட்டு அதன் அருகாமையில் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கிளையாறு கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்து மூடப்பட்டதால் மழை காலங்களில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று பாதிப்பை ஏற்படுத்தி வரக்கூடிய நிலையில்  முற்றிலுமாக எடுப்பதற்கான முயற்சியில் ஒப்பந்ததாரர்கள் விதிமுறைகளை மீறி தற்போது கால்வாய்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பாலாற்றின் கிளை ஆற்றை பாதுகாக்க வேண்டும். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 மேலும் கடந்த மாதங்களில் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா பாலாற்றின் கிளை ஆறுகளை நேரடியாக பார்வையிட்டு பாலாற்றின் கிளை ஆறுகளில் கழிவுகளை கொட்ட கூடாது எனவும், இதனை நகராட்சி கண்காணிக்க உத்தரவிட்டார். மேலும் பாலாற்றின் கரைகளில் கொட்டப்படும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தி அங்கு இருபுறமும் வேலிகளை அமைத்து கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என அறிவித்திருந்தனார். ஆனால் பெயரளவிற்கு மட்டுமே குப்பை கழிவுகளை அகற்றி அதனை சீர் செய்யாமல் பாதியிலேயே விட்டு விட்டனர். இதனால் மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் தற்போது குப்பை கழிவுகளை அப்பகுதியில் கொட்டி வருகின்றனர். மாவட்ட  கலெக்டர் உத்தரவு தற்போது காற்றில் பறக்கும் அவல நிலைதான் உள்ளது என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: