மாமல்லபுரம் வந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: சுற்றுலா தலமான மாமல்லபுரத்துக்கு வந்த தமிழக புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்குள்ள கடற்கரை கோயிலை தன் குடும்பத்தோடு கண்டு ரசித்தார். மேலும், குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் 26வது புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நேற்று காலை ராஜ்பவனில் பதவி ஏற்றுக் கொண்டார். இந்த பதவி ஏற்பு விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுநரின் குடும்பத்தார், நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் 30 க்கும் மேற்பட்டோர் புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க நேற்று மாலை மாமல்லபுரம் வந்தனர்.

அப்போது, கடற்கரை கோயில் நுழைவு வாயில் அருகே செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், மாவட்ட எஸ்பி விஜயகுமார், ஏடிஎஸ்பி பொன்ராம் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், கடற்கரை கோயிலை கண்டு ரசித்து குடும்பத்தோடு நின்று குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். அவருக்கு மாமல்லபுரம் நகரின் வரலாற்று பெருமை, பல்லவர் கால சிற்பங்கள், அவை உருவாக்கப்பட்ட காலம் அவற்றை செதுக்கிய மன்னர்கள் குறித்த விபரங்களை சுற்றுலா வழிகாட்டிகள் தெளிவாக விளக்கிக் கூறினர்.

இதற்கு முன்னதாக, ஆளுநர்  வருகையொட்டி மாமல்லபுரம் டிஎஸ்பி ஜகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆளுநர் வருகையை முன்னிட்டு கடற்கரைக்கு செல்லும் வழியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. இதில், திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ், சுற்றுலா அலுவலர் ராஜாராமன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: