செல்லுலாய்ட் பெண்கள்

நன்றி குங்குமம் தோழி

இசைவானில் சிறகடித்த குயில் என்.சி.வசந்த கோகிலம்

எம்.எஸ்.சுப்புலட்சுமியைப் போன்றே எண்ணிக்கையில் மிகக் குறைந்த திரைப்படங்களில் மட்டுமே நடித்தவர். பின்னர் முழு நேரமும் இசையைத் தன் துணையாக வரித்துக் கொண்டவர் என்.சி. வசந்த கோகிலம். 1940 - 50 காலகட்டத்தில் உச்சம் தொட்ட குரலுக்குச் சொந்தக்காரர். சாஸ்திரீய இசையில் இவரது 78 ரெக்கார்டுகள் வெளிவந்துள்ளன. எவ்வளவுதான் திறமைகள் குவிந்திருந்தபோதும் குன்றின் மேலிட்ட விளக்கு போல ஒளிர வேண்டுமானால் அதற்கு ஓரளவுக்கு  வசதி - வாய்ப்புகளும் வேண்டியே இருக்கிறது.

கலைத்துறையே ஆனாலும் அதில் திறமையுள்ளவர்கள் மட்டுமே மிளிர முடியுமானாலும் அதிலும் பேதங்கள் இருக்கத்தானே செய்கின்றன. அதோடு அற்பாயுளில் ஒரு கலைஞர் மறைந்து விடும்போது வரலாறு அக் கலைஞரை எளிதாக மறந்தும் போய் விடுகிறது. அல்லது எப்போதோ ஒருமுறை நினைவுக்குக் கொண்டு வருகிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமியை ‘எம்.எஸ். அம்மா’ என்று கொண்டாடுகிற அளவுக்கு என்.சி.வசந்த கோகிலத்தின் இனிய குரல் வளமும் பாடல்களும் ஏன் கொண்டாடப்படுவதில்லை? மிகக் குறுகிய காலமே பாடித் திரிந்து மறைந்து போன அந்த வசந்தத்தின் குயில் குறித்து இன்றைய தலைமுறைக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்பதும் பெரும் கேள்விக்குறிதான்.

எம்.எஸ்.சுப்புலட்சுமியையும் மிஞ்சிய குரலினிமை

‘பெண் குரல்கள் வாய்ப்பாட்டுக்கு ஏற்றவை அல்ல, காம்பீர்யம் மிக்க ஆண் குரல்களே பாடுவதற்கு ஏற்றவை’ என்பது எங்கள் தோழமைத் தந்தையும் மூத்த பத்திரிகையாளருமான சின்னக் குத்தூசி அவர்களின் தீர்மானகரமான கருத்து. அபூர்வமான, அதே நேரம் அபாரமான இசை ரசிகர் அவர்.  வீணை, வயலின், புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகள் வாசிப்பதுதான் பெண்களுக்கு மிகப் பொருத்தம் என்பார் அவர். அந்தக் கருத்தில் எப்போதும் பிடிவாதமாகவும் இருப்பார். ராகங்கள் பற்றி இழை இழையாகப் பிரித்து விமர்சிப்பவர். எழுத்துப் பணி, நண்பர்கள் வருகை குறைந்திருக்கும் ஓய்வு நேரங்களில் பெரும்பாலும் இசையில் ஆழ்ந்து திளைப்பதும் சில நேரங்களில் பாடுவதும் அவரது பெரு விருப்பங்கள்.

இசை குறித்துப் பேசும்தோறும் தன்னை மறந்து அதில் லயித்து விடுபவர். அவரைச் சந்திக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும் இசை குறித்தும் இசைக் கலைஞர்கள் பற்றியும் நீண்ட நேரம் உரையாடுவோம். அற்புதமான பல இசைக்கலைஞர்களின் அதி அற்புதமான பாடல்கள் குறித்துப் பேசுவார். அவர் சொல்வதில் சில விஷயங்களில் எனக்கு மாற்றுக் கருத்து இருந்தபோதும் அவருடன் விவாதிக்க மாட்டேன். ஆனால், பெண் குரல்கள் பாடுவதற்கு ஏற்றவை அல்ல என்று அவர் தீவிரமாகப் பேசியபோது இந்த ‘விவாதிக்கா விரதம்’ ஒரு நாள் உடைந்து நொறுங்கித் தூள் தூளாகிப் போனது.

நான் அதற்கு மாறாகப் பல பெண் குரல்கள் பற்றியும் அவர்களின் பிரபலமான பாடல்களையும் குறிப்பிட்டு விவாதிப்பேன். குறிப்பாக எம்.எல்.வசந்தகுமாரி மற்றும்

எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றி சிலாகித்துப் பேசுவேன். அத்தகைய நாட்களில் ஒருநாள் தன் பிடிவாதத்திலிருந்து கொஞ்சம் இறங்கி வந்தார். “எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசை மிகச் சிறப்பானதுதான். அதில் சந்தேகமில்லை. அவரது ‘காற்றினிலே வரும் கீதம்’ பாடல் இன்னைக்கும் நிக்குது. நாளைக்கும் நிக்கும். இசை இருக்கும் வரை நிக்கும். ஆனால், எம்.எஸ்.சுப்புலட்சுமியை விட மேலான, இனிமையான குரல் வளம் வசந்த கோகிலத்துக்கு உண்டு. அந்தம்மாஉடைய இசையும் பாடலும் அதை விடச் சிறப்பானது’ என்றார்.

அன்றைய உரையாடல் முழுவதும் வசந்த கோகிலம் மற்றும் அவருடைய பாடல்கள் குறித்ததாக இருந்தது. அவரின் ‘அந்த நாள் இனி வருமோ, சொல்லடி அம்பலப் பசுங்கிளியே’ என்ற பாடல் எவ்வளவு இனிமை வாய்ந்தது என்பதையும், சுத்தானந்த பாரதியாரின் அப்பாடல் இசைத்தட்டு அக்காலத்தில் எந்த அளவுக்குப் பிரபலமாக இருந்தது என்பது பற்றியும் நெக்குருகிப் பேசியதுடன், அப்பாடலின் சில வரிகளைப் பாடியும் காண்பித்தார். ‘அப்படியானால் பெண்கள் பாடுவதற்கும் தகுதியானவர்கள் என்பதை ஒப்புக் கொள்றீங்கதானே சார்’ என்று அதையே நான் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தியதும், சிரித்தவாறே பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார்.

அவருடைய பரிந்துரையின் பேரில் அதன் பின் என்.சி. வசந்த கோகிலத்தின் பாடல்களைத் தேடித் தேடிக் கேட்டபொழுதுதான் அவருடைய குரலின் இனிமையையும் அபாரமான இசை ஞானத்தையும் குறைவற உணர முடிந்தது. எம் எஸ்.சுப்புலட்சுமி, என்.சி. வசந்தகோகிலம் இருவரில் யார் பாடுகிறார்கள் என்பதில் எளிய ரசிகர்களுக்கு அந்தக் காலத்தில் குழப்பம் இருந்ததும் மறுக்க முடியாத உண்மை. இருவரது பாடல்களையும் ஆழ்ந்து கேட்பவர்களால் மட்டுமே இதனை நன்கு உணர முடியும்; அவ்விருவர் குரல்களின் வேறுபாடும்  புரியும். அந்த வகையில் வசந்த கோகிலத்தின் இனிய குரலை எனக்கு

அறிமுகப்படுத்தியவர் அய்யா சின்னக் குத்தூசி அவர்கள்தான்.

ஒருங்கிணையாத அபார இசை ஞானமும் நடிப்பும்  

பாடத் தெரிந்தால் மட்டுமே நடிப்பதற்கு வாய்ப்பு என்றிருந்த காலத்தில் அபாரமான இசைஞானம் கொண்ட பலரும் திரைத்துறைக்குள் நுழைந்தாலும், நடிப்பிலும், இசையிலும் அனைவராலும் ஒருசேர ஜொலிக்க முடியவில்லை என்பதையும் திரை வரலாறு நன்கு வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது. அழகும் நடிப்பும் கூட அப்போது இரண்டாம் பட்சம்தான். ‘சகுந்தலை’, ‘உதயணன் வாசவதத்தா’ போன்ற படங்களில் ஜி.என்.பாலசுப்பிரமணியம் அருமையாகப் பாடியிருந்தாலும் நடிப்பு அவரை விட்டு சற்று விலகியே நின்றது.

ஹொன்னப்ப பாகவதர், டி.ஆர்.ராஜகுமாரி நடித்த ‘சதி சுகன்யா’ படம் இப்போதும் தொலைக்காட்சிகளில் திரையிடப்படுகிறது. ஹொன்னப்ப பாகவதரின் பாடலை ரசித்துக் கேட்கும் அளவு நடிப்பை ரசிக்க முடியவில்லை. மிக செயற்கையான நடிப்பையே பலரிடமும் காண முடிந்தது. எம்.எம்.தண்டபாணி தேசிகர், எம்.கே. தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, கே.ஆர்.ராமசாமி இவர்களில் கடைசி மூவர் மட்டுமே உச்சம் தொட்டவர்கள். மற்றொரு வெற்றியாளர் டி.ஆர்.மகாலிங்கம். பாகவதர் சிறை சென்றபோதும், அவருடைய மறைவுக்குப் பின்னரும் அவர் இல்லாத வெற்றிடத்தை நிறைவு செய்த பெருமைக்குச் சொந்தக்காரர்.

பெண்களில் எம்.எஸ்.சுப்புலட்சுமி, என்.சி.வசந்த கோகிலம், எம்.எல்.வசந்த குமாரி, பி.ஏ. பெரிய நாயகி இவர்கள் அனைவருமே நடிப்பதற்காக வந்தவர்கள்தான் என்றாலும், ஒரு கட்டத்தில் நடிப்பைக் கைவிட்டு இசைத்துறையில் மட்டும் முழுமையாகக் கவனம் குவித்து தமிழ் செவ்வியல் இசையில் தவிர்க்க முடியாத ஆளுமைகளாகக் காலம் கடந்தும் நிலைத்து நின்றவர்கள். பாடி நடித்துக் கொண்டிருந்த வேறு சில நடிகைகளும் கூட நடிப்பை மட்டுமே முதன்மைத் தொழிலாக ஏற்று, இரவல் குரலைப் பெற்றுப் பாடுபவர்களாக மாறினார்கள். இந்த வரிசையில் விதிவிலக்காக கே.பி.சுந்தராம்பாள், பி.பானுமதி மற்றும் எஸ்.வரலட்சுமி மூவரும் இறுதி வரையிலும் தங்கள் சொந்தக் குரலில் பாடியும் நடித்தும் வந்தவர்கள். இவர்கள் மூவருமே வித்தியாசமான குரலுக்குச் சொந்தக்காரர்களும் கூட.  

கேரளத்திலிருந்து செந்தமிழ் நாட்டுக்குப் பிரவேசம்

வசந்த கோகிலம் 1919ல் கேரளத்தின் இரிஞ்ஞாலகுடாவில் பிறந்தவர். ஆனால் வளர்ந்ததெல்லாம் நாகப்பட்டினத்தில். அப்பா சந்திரசேகர அய்யர் ஒரு இசைக்கலைஞர். இவரது கடைக்குட்டி மகளான காமாட்சி, ஆம் ! அதுதான் வசந்த கோகிலத்தின் இயற்பெயர். திருவாரூர் வடம்போக்கித் தெருவில் 15 வயது வரை வாசம், அங்கு ஹரிகதை சொல்வதில் வல்லவரான ஜாலர் கோபாலய்யரிடம் சிறு வயதிலேயே சேர்ந்து முறைப்படி வாய்ப்பாட்டு பயின்றார்.

இயல்பிலேயே இசை ஞானமும் இனிமையான குரலும் வாய்க்கப் பெற்றிருந்ததால் வெகு விரைவில் சங்கீதம் அவர் குரலுக்குக் கட்டுப்பட்டது. வசந்த கோகிலம் என்பதே இசைத் திறமையால் அவருக்கு வந்து சேர்ந்த பெயர்தான்! குயிலை ஒத்த இனிமையான குரல் வளம் பெற்றிருந்ததால் வைக்கப்பட்ட பெயர் அது. இறுதிவரை அப்பெயரே அவருக்கு நிலைத்தது. நாகப்பட்டினம் சந்திரசேகரய்யர் வசந்த கோகிலம் என்பதே தலைப்பெழுத்தானது.

சென்னைப் பட்டணம் அளித்த ராஜபாட்டை

இசைத்துறையில் வெற்றி பெற விரும்புவோருக்கு அக்காலத்தில் சென்னை வாய்ப்புகளை வழங்கும் மேடையாக இருந்தது. சந்திர சேகரய்யரும் தனது மகளை அழைத்துக்கொண்டு 1936 ல் சென்னையை நோக்கிப் பயணமானார். வசந்த கோகிலம் சென்னையில் இசைப்பயிற்சிகள் மேற்கொண்டதுடன் கச்சேரிகளும் செய்தார். அவரது குரலினிமை தேனாகப் பரவி இசை ரசிகர்களை ஈர்த்தது. 1938ல் சென்னை மியூசிக் அகாடமியில் மைசூர் மகாராஜா தலைமையில் நடைபெற்ற இசைவிழாவில், ஓர் இசைப்போட்டி நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டு பாடியவர்களில் முதல் பரிசு வசந்த கோகிலத்துக்கே கிடைத்தது.

இனிமையான அந்தக் குரலுக்கு அகாடமியே செவி சாய்த்தது என்றும் சொல்லலாம். H.M.V. ரெக்கார்ட் நிறுவனம் இவர் பாடல்களைத் தனிப் பாடல்களாகப் பதிவு செய்து, அந்த இசைத்தட்டுகள் அமோகமாக விற்பனை ஆயின. ஆரம்பமே அவருக்கு ராஜபாட்டையாக அமைந்தது. அந்நாட்களில் மிகப் பிரபலமான இசைக் கலைஞர்களைத் தங்கள் இல்லத் திருமணக் கச்சேரிகளில் பாட வைப்பது ஒரு சமூக அந்தஸ்து மிக்க செயலாகப் பார்க்கப்பட்டது.

அப்படித்தான் 1939ல் திருமலைராயன் பட்டினம் கனகசபை முதலியார் என்ற பெரும் செல்வந்தர் வீட்டுத் திருமணத்தில் கச்சேரி செய்யும் வாய்ப்பு கோகிலத்தைத் தேடி வந்தது. இக் கச்சேரியைக் கேட்டவர்கள் மூலம் சினிமாவில் பாடி நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த 18 வயது இசைக்குயில் அடுத்தடுத்த உயரங்களை நோக்கிப் பறந்து சென்றது.

திரையுலகு அளித்த கௌரவம்

1940ல் டிரினிடி தியேட்டர்ஸ் நிறுவனத்தார் ‘சந்திரகுப்த சாணக்யா’ என்ற படத்தைத் தயாரித்தனர். அப்படத்தில் மலையரசன் மகள் சாயாவாக, சந்திரகுப்தன் மேல் காதல் கொள்ளும் பெண்ணாக வசந்த கோகிலம் நடித்தார். ‘சதி லீலாவதி’ படத்தின் இயக்குநர் எல்லீஸ் ஆர்.டங்கனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இளம் வழக்கறிஞர் சி.கே.சச்சி என்ற சதாசிவம் இப்படத்தின் இயக்குநர். படம் ஓடியதோ இல்லையோ கோகிலத்தின் பாடல்கள் ரசிகர்களைச் சுண்டி இழுத்தன. இவரது குரலினிமையே அடுத்தடுத்து இவருக்குப் பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் அளித்தது.  

1941 ல் ‘வேணு கானம்’ என்று ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. படத்தின் பெயரே கானமாக இருக்கும்போது பாடல்கள் மற்றும் இசையின் உத்தரவாதம் பற்றி கேட்க வேண்டுமா? அத்தனையும் கானாமிர்தம். கவிஞர் கம்பதாசன் பாடல்களுடன் கோபால கிருஷ்ண பாரதியின் மிகப் பிரசித்தி பெற்ற கீர்த்தனையான ‘எப்போ வருவாரோ’ என வசந்த கோகிலத்தின் குரலில் பாடல்கள் அனைத்தும் இனிமை சேர்க்க, படம் பெரு வெற்றி பெற்றது. அப்போதைய பிரபல இயக்குநர் முருகதாஸா படத்தை இயக்க, கதாநாயகன் வி.வி.சடகோபன்.

இவரும் இப்படம் மற்றும் ‘மதன காமராஜன்’, அதிசயம், நவயுவன் என மிகக் குறைந்த எண்ணிக்கையிலான படங்கள் தவிர்த்து வேறு படங்களில் தொடர்ந்து நடிக்கவில்லை. கோபால கிருஷ்ண பாரதியின் பெரும்பாலான பாடல்களையும் இவரே பாடியிருக்கிறார். 1942ல் மீண்டும் சி.கே.சச்சியின் இயக்கத்தில் ‘கங்காவதார்’ என்றொரு படம், கங்கை வேடம் வசந்த கோகிலத்துக்கு. இந்தப் படமும் வெற்றியை எட்டியது. இயக்குநர் சச்சி என்ற சதாசிவமும் வசந்த கோகிலமும் இணைந்து வாழ்ந்ததாகவும் சில பழைய பத்திரிகைகள் தகவல்களைச் சொல்கின்றன.

ஆனால், இவர்களின் இந்த வாழ்க்கை நீடித்து நிலைக்காமல் போனது கோகிலத்தின் அதிர்ஷ்டமா துரதிருஷ்டமா எனத் தெரியவில்லை. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் அவர் கணவர் சதாசிவம் அவரது உயர்வுக்கும் முன்னேற்றத்துக்கும் பின்னணியாக இருந்ததைப் போல, வசந்த கோகிலத்தின் வாழ்க்கையில் சச்சி என்ற சதாசிவம் ஒரு ஏணியாக மாறாமல் போனது வசந்த கோகிலத்துக்குப் பெரும் பின்னடைவே.

ஹரிதாஸின் பத்தினியும் நாரதர் வேடங்களும்  

1944ல் வெளிவந்து மூன்று தீபாவளிகளைக் கண்ட ‘ஹரிதாஸ்’ படத்தில் பாகவதரின் மனைவி பாத்திரம் கோகிலத்துக்கு. இதில் நடித்த அனைவருக்குமே இது ஒரு பிளாக் பஸ்டர் படம் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமுமில்லை. பாகவதரின் குரலுக்கு இணையாக வசந்த கோகிலம் பாடிய ‘கதிரவன் உதயம் கண்டே’, ’எனது மனம் துள்ளி விளையாடுதே’, ‘எனது உயிர் நாதன்’, ‘கண்ணா வா’ என நான்கு பாடல்கள் உண்டு. ஆனால், பாகவதரின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்ததைப் போல இவை அதிகம் அறியப்படவில்லை.

இப்போதும் அந்தப் படத்தைப் பார்க்கும்போது அவரது குரலினிமை சொக்க வைக்கிறது. பாடல் மட்டுமல்லாமல் துடுக்குத்தனமாகப் பேசுவது, தாசி ரம்பா (டி.ஆர்.ராஜகுமாரி) வுக்கும் அவரது குழுவினருக்கும் பிரம்படி கொடுத்து வெளுப்பது என இவர் நடிப்பிலும் குறையேதும் வைக்கவில்லை. 1946ல் ‘குண்டலகேசி’ மற்றும் ‘வால்மீகி’1950ல் ‘கிருஷ்ண விஜயம்’ என மூன்று படங்கள். ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி கதைதான். கதாநாயகி கே.எல்.வி.வசந்தா, இரண்டாவது கதாநாயகி வேடம் கோகிலத்துக்கு.

ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பான ’கிருஷ்ண விஜயம்’ மிகப் பெரிய வெற்றிப்படம். நந்தனார், கிருஷ்ணன், நாரதர் போன்ற ஆண் வேடங்களை எல்லாம் முறையே கே.பி.சுந்தராம்பாள் (நந்தனார்), எஸ்.டி.சுப்புலட்சுமி (உஷா பரிணயம்), எம்.எஸ்.சுப்பு லட்சுமி (சாவித்திரி), குமாரி ருக்மணி போன்ற அக்கால கதாநாயகிகளான உச்ச நட்சத்திரங்களே ஏற்று நடித்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக வசந்த கோகிலம் கிருஷ்ண விஜயம், வால்மீகி இரு படங்களிலும் நாரதர் வேடம் ஏற்று நடித்தார்.

இயக்கம் சுந்தர்லால் நட்கர்னி. பாடல்கள் அனைத்தும் பாபநாசம் சிவன் எழுதியவை. ’இசைச்சித்தர்’ சிதம்பரம் ஜெயராமன் இசையமைக்க பாடல் களுக்காகவே இப்படம் பல வாரங்கள் ஓடியிருக்கிறது. அதில், கோகிலம் பாடிய ‘கருணாநிதி மாதவா’ என்றொரு பாடல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தயவால் வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்ட ஒரு பாடல். ‘வால்மீகி’ என்ற படத்தையும் ஜூபிடர் பிக்சர்ஸ்தான் தயாரித்தது. இப்படத்திலும் நாரதர் வேடமே இவருக்கு வாய்த்தது. இப்படம் எம்.கே.தியாகராஜ பாகவதர் - யு.ஆர்.ஜீவரத்தினம் இணையாக நடிக்க உருவாக்கப்பட்டது.

அந்த நேரத்தில் பாகவதர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிறை செல்ல நேர்ந்ததால், ஹொன்னப்ப பாகவதரைக் கதாநாயகனாக்கிப் படம் எடுத்து முடிக்கப்பட்டது. ஆனால், மக்களிடம் தியாகராஜ பாகவதருக்கு இருந்த புகழும் கவர்ச்சியும் செல்வாக்கும் ஹொன்னப்ப பாகவதரிடம் இல்லாமல் போனதால் எதிர்பார்த்த வெற்றியைப் படம் ஈட்டித் தரவில்லை.

ஆரம்பத்திலேயே நின்று போன ஆண்டாள்

வசந்த கோகிலத்தின் இசைத்திறனுக்காகவே ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரின் கூட்டு நிறுவனமான ‘பிரகதி ஸ்டுடியோ’ ‘ஆண்டாள்’ என்ற படத்தை ஏராளமான பாடல்களுடன் தயாரிக்க முடிவு செய்து, அதன் ஆரம்பக் கட்ட வேலைகளும் முழு மூச்சாய்த் தொடங்கப்பட்டன. ‘ஹிந்து’ ஆங்கில நாளேட்டில் கலரில் விளம்பரம் செய்து பிரமாதப்படுத்தினார்கள். இந்த விளம்பரம் பற்றியே அப்போது பல பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட்டன. ஆனால், துரதிருஷ்டவசமாக பிரகதி ஸ்டுடியோ பங்குதாரர்கள் பிரிய நேர்ந்ததில் இந்தப் படத் தயாரிப்புப் பணி  பாதியிலேயே நிறுத்தப்பட்டு, மந்தைவெளிப்பாக்கத்தில் இருந்த பிரகதி ஸ்டுடியோவும் விற்கப்பட்டது.

அதன் பின்னர் வடபழனியில் தோல் பதனிடும் தொழிற்சாலை நடத்தி வந்த இஸ்லாமியர் ஒருவரிடமிருந்து  இடம் வாங்கி ஸ்டுடியோ ஆரம்பித்து நடத்தும் வேலைகளில் செட்டியார் மும்முரமாய் இறங்கியதால் இப்படம் கைவிடப்பட்டது. திட்டமிட்டபடி ‘ஆண்டாள்’ படம் தயாரிக்கப்பட்டு வெளி வந்திருந்தால், குறைந்தபட்சம் 15 அல்லது 16 பாடல்களுடன் வசந்த கோகிலம் புகழின் உச்சிக்கே போயிருப்பார். ஆனால், காலமும் நேரமும் அவருக்கு ஒத்துழைக்கவில்லை, உறுதுணையாகவும் இல்லை.

சந்திரகுப்த சாணக்யா, வேணு கானம், கங்காவதார், ஹரிதாஸ், குண்டலகேசி, வால்மீகி, கிருஷ்ண விஜயம் என 7 படங்களில் மட்டுமே என்.சி.வசந்த கோகிலம் நடித்துள்ளார். 1940ல் தொடங்கிய திரைப் பயணம் 1950ல் முடிவுக்கு வந்தது.  

முழு நேர இசைக்கலைஞராக மட்டுமே

சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பம், தோல்வியால் மேற்கொண்டு திரையுலக வாழ்வைத் தொடர விரும்பாத கோகிலம், தன் திறமைகள் அனைத்தையும் கர்நாடக இசையிலேயே செலுத்த ஆரம்பித்தார். கச்சேரிகள், இசைத்தட்டுகள் என அத்துறையில் பிஸியானார். 1945ல் கும்பகோணத்தில் நடைபெற்ற கலை முன்னேற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பாடியவருக்கு ‘மதுரகீத வாணி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. வழங்கியவர் இசைமேதை டைகர் வரதாச்சாரியார். சென்னை தமிழிசைச் சங்கம், நெல்லை சங்கீத சபா என்று தொடர்ச்சியாகக் கச்சேரிகள்.

1942லிருந்து தன் இறுதிக் காலமான 1951 வரை ஒவ்வோராண்டும் தவறாமல் திருவையாறு தியாகராஜ ஆராதனை விழாக்களிலும் பங்கேற்றுப் பாடி வந்திருக்கிறார். ‘ஏன் பள்ளி கொண்டீரய்யா?’, ‘நீ தய ராதா’, ‘குயிலோசை கேட்குதம்மா’, ‘அருள் புரிவாய்’, ‘நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட உத்தமன் யாரோடி தோழி’, போன்ற பாடல்களை இனிமை கொஞ்சும் இளமை மாறாத அவரின் குரலில் இப்போது கேட்டாலும் மனம் மயங்குகிறது. யுடியூப் என்னும் அமுதசுரபி இந்தப் புதையல்களை எல்லாம் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.

மதுரையிலிருந்து எம்.எஸ். சுப்புலட்சுமியை சென்னைக்கு அழைத்து வந்து, அவரது குரல் உலகம் முழுவதும் பரவி புகழடையச் செய்ததில் சதாசிவத்துக்கும் அவரது செல்வாக்குக்கும் பெரும் பங்கு உண்டு. ஆனால், அதே காலத்தில் அவரை விடச் சிறப்பான குரல் வளமும் இசை நுட்பங்களும் கொண்டிருந்த வசந்த கோகிலத்துக்கு வாய்ப்புகள் கிடைத்திருந்தாலும் கூட, இசையில் அவரது சாதனைகள் தொடர்ந்தாலும் மிகச் சிறு வயதிலேயே காச நோய்த் தாக்குதலுக்கு ஆளானார். சிகிச்சைகள் பலனளிக்காமல் வசந்த கோகிலம் என்ற மேதைமை மிக்க இசைக்குயில் 32 வயதில் 1951ல் உலகைத் துறந்து பறந்து போனது.

இளம் வயதிலேயே பெரும் வெற்றி பெற்ற கலை ஆளுமைகளைக் காலதேவன் இரக்கமில்லாமல் கொள்ளை கொண்டு போவது மிகவும் துயரமானது. மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், இசைச் சக்கரவர்த்தி எஸ்.ஜி.கிட்டப்பா மற்றும் முதல் இரு மொழி (கன்னடம், தமிழ்) நட்சத்திரமாகப் பிரகாசித்த அஸ்வத்தம்மா போன்று வசந்த கோகிலமும் மிக இளம் வயதிலேயே மறைந்தார். ஆனால் இவரின் குரல் என்றும் இசைவானில் ரீங்கரித்துக்கொண்டே இருக்கும். தான் சம்பாதித்த சொத்துக்களை எல்லாம் காசநோய் மருத்துவமனைக்கே வசந்த கோகிலம் எழுதிக் கொடுத்து விட்டார் என்பது ஆறுதலளிக்கும் செய்தி.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஸ்டில்ஸ் ஞானம்

Related Stories:

>