9 மாவட்ட ஊரக உள்ளாட்சித்தேர்தல் பதவிகள் ஏலம் விடுவதை தடுக்க வேண்டும்: கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை

சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் அறிவிக்கைகளையும், ஏனைய 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கான தற்செயல் தேர்தல் அறிவிக்கைகளையும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு 15.9.2021 முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவியிடங்களுக்கு ஏலம் விடுவது போன்ற ஜனநாயகத்திற்கு  ஊறுவிளைவிக்கும் செயல்களை தடுத்திட மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

 தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் அலுவலர்களான மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:  அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், மக்களாட்சி தத்துவத்திற்கும் புறம்பாக நடைபெறும் ஏலம் விடுதல் போன்ற செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி, தண்டனைக்குரியது. இதை தடுத்திட மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுப்பதுடன் இத்தகைய நிகழ்வுகள் ஜனநாயகத்திற்கு எதிரானவை என்பதனை மக்கள் உணர செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  

ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி கிராமப்புற மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஜனநாயக முறைபடி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.   இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: