ஓட்டல்களில் அதிரடி சோதனை சுகாதாரமற்ற முறையில் இருந்த 40 கிலோ இறைச்சி பறிமுதல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், பஸ் நிலையம், செங்கழுநீரோடை வீதி உள்பட பல பகுதிகளில் உள்ள அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி 40 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த சில நாட்களுக்கு முன் அசைவ உணவு சாப்பிட்ட 10 வயது சிறுமி லோஷினி உடல்நிலை பாதித்து இறந்தாள். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அசைவ ஓட்டல்களில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் காஞ்சிபுரத்தில் பஸ் நிலையம், செங்கழுநீரோடை வீதி, பூக்கடைசத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அசைவ ஓட்டல்களில் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அதில், சுமார் 10க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் செயற்கை நிறமிகள் அதிகம் சேர்க்கப்பட்டு, சுகாதாரமற்ற முறையில் தயார் செய்த 40 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர். தொடர்ந்து 12 கடைகளுக்கு தலா ₹2 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுபோன்ற சோதனைகள் தொடரும் என தெரிவித்த அதிகாரிகள் விதிமுறைகளை மீறும் ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.

Related Stories: