மொபட் சீட்டை உடைத்து ரூ.2.5 லட்சம் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை

ஆவடி: அம்பத்தூர் அடுத்த கொரட்டூர், சாவடி தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் (29). பாடி, ராஜா தெருவில் பேட்மிட்டன் கோர்ட் நடத்தி வருகிறார். நேற்று மதியம் ரஞ்சித், கொரட்டூர் 2வது மெயின் ரோட்டில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றார். அங்கு தனது கணக்கில் இருந்து ரூ.2.5 லட்சம் எடுத்து கொண்டு வெளியே வந்தார். பின்னர் அந்த பணத்தை தனது மொபட் சீட் பெட்டியில் வைத்து விட்டு, அருகே உள்ள ஏடிஎம் மையத்துக்கு சென்றார் அங்கு, ஏடிஎம் கார்டு பின் நம்பரை மாற்றம் செய்துவிட்டு, மொபட்டை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றார். அப்போது, மொபட் சீட் பெட்டியை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த பணத்தை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து, ரஞ்சித் கொரட்டூர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ராஜீவ் பிரன்ஸ் ஆரோன் வழக்குப்பதிவு செய்து, ஏடிஎம் மற்றும் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான  காட்சிகளை வைத்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் தாலுகா, சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (31). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சமீபத்தில், சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று காலை செல்வகுமார் கடலூரில் இருந்து, அம்பத்தூர் அருகே கொரட்டூர் அக்ரஹாரத்தில் உள்ள மாமா முருகன் வீட்டுக்கு காரில் சென்றார்.

காரை வீட்டின் அருகே நிறுத்தி இருந்தார். மதியம், செல்வகுமாரின் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த செல்வகுமார் மற்றும் உறவினர்கள் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. தகவலறிந்து வில்லிவாக்கம் தீயணைப்பு நிலைய அதிகாரி மன்னார் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, தீயை அணைத்தனர். அதற்குள், கார் முழுவதும் எரிந்து தீயில் கருகி சேதமானது. புகாரின்படி கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: