மேலும் ஒரு மாணவி தற்கொலை; நீட் தேர்வுக்கு அஞ்சி தயவுசெய்து யாரும் தற்கொலை செய்யாதீர்: அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுகோள்

சென்னை: நீட் தேர்வால், மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு இரங்கல் தெரிவித்துள்ள, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், நீட் தேர்வுக்கு அஞ்சி தயவு செய்து யாரும் தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் என்று வேண்டி கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்: வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த மாணவி சௌந்தர்யா நீட் தேர்வு எழுதி, முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக உள்ளது. அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துவதோடு, அவரது பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: காட்பாடி அருகே  தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த மாணவி சவுந்தர்யா தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. மாணவச் செல்வங்கள் நம்பிக்கை இழக்கக்கூடாது. மனம் தளர வேண்டாம் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன். மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:  மாணவ கண்மணிகள் தங்களை தாங்களே மாய்த்துக் கொள்ள வேண்டாம், இப்படிப்பட்ட துயரமான முடிவுக்கு செல்ல வேண்டாம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: நீட் தேர்வு எழுதிய மாணவ- மாணவியர் ஒரு போதும் மனம் தளரக்கூடாது. இதற்காக மாணவர்களின் பெற்றோர் அவர்களுக்கு தைரியத்தை ஊக்குவிக்க வேண்டும். தங்களை படிக்க வைக்க பெற்றோர்கள் மேற்கொள்ளும் கடின உழைப்பையும், தங்கள் மீது கொண்ட அன்பையும் நினைத்துப் பார்த்து கல்வியில் தொடர் முயற்சி, வாழ்வில் முன்னேற்றம் என பயணிக்க வேண்டும். உயிரிழந்த மாணவி சவுந்தர்யாவின் இழப்பு அவரது பெற்றோருக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்: ராணிப்பேட்டை தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சவுந்தர்யா என்ற மாணவி நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் கிடைக்காது என்ற அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியைக் கேட்டு பெரும் வேதனை அடைந்தேன். தமிழ்நாட்டு மாணவர்களை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்வதெல்லாம் நீட்டுக்கு அஞ்சி தயவு செய்து தற்கொலை செய்து கொள்ளாதீர் என்பதைத் தான். நீட் தேர்வை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அது கண்டிப்பாக அகற்றப்பட்டாக வேண்டும். அதே நேரத்தில் எந்த ஒரு சூழலையும் எதிர்த்து போராடுவதற்கு மாணவர் சமுதாயம் தயாராக இருக்க வேண்டும். இனியும் நீட் தேர்வால் எந்த மாணவரும் தற்கொலை செய்து கொள்ளாமல் தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

Related Stories: