அரசு கட்டிடங்களில் இருந்து நீக்கப்பட்ட கலைஞர் பெயர் கொண்ட கல்வெட்டுகள் மீண்டும் பொருத்தம்: தலைமை செயலாளரின் உத்தரவை தொடர்ந்து பொதுப்பணித்துறை நடவடிக்கை

சென்னை, செப். 16: 2006-2011 திமுக ஆட்சியில், கட்டப்பட்ட கட்டிடங்களில் இருந்து நீக்கப்பட்ட கலைஞர் பெயர் கொண்ட கல்வெட்டுகள் மீண்டும் பொருத்தப்பட்டு வருகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  ஓமந்தூரர் அரசினர் தோட்டத்தில் கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சி காலத்தில் ₹910 கோடியில் தலைமை செயலகம், கோட்டூர்புரத்தில் ₹179 கோடியில் அண்ணா நூற்றாண்டு நூலகம், அண்ணா மேம்பாலம் அருகில் ₹8 கோடியில் செம்மொழி பூங்கா, அடையாறில் ₹100 கோடியில் தொல்காப்பியர் பூங்கா,

விழுப்புரம், திருவாரூர், தர்மபுரி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய 6 புதிய மருத்துவ கல்லூரிகள், ஒரத்தநாடு, பெரம்பலூர், சுரண்டை, லால்குடி உட்பட 14 இடங்களில் அரசு கலை கல்லூரிகள், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் உட்பட 12 இடங்களில் புதிதாக பொறியியல் கல்லூரிகள், மெரீனாவை உலகதரத்தில் அழகுப்படுத்தும் வகையில் பூங்கா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில்,  அப்போதைய அதிமுக அரசு, மறைந்த முதல்வர் கருணாநிதி பெயர் இருந்த கல்வெட்டுகளை அகற்றியது. குறிப்பாக, திருச்சி கலெக்டர் அலுவலகம், செம்மொழி பூங்கா, மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகள் பெயர்த்து  எடுக்கப்பட்டன. ஓமந்தூரரில் உள்ள தலைமை செயலக கட்டிடம் மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளும் அகற்றப்பட்டன.

இதேபோன்று மாநிலம் முழுவதும் திமுக ஆட்சியில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகள் அகற்றப்பட்டன. இதற்கு, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், அப்போதைய அரசு இதை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், 2006-2011ல் திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களில் உள்ள கல்வெட்டுகளை திரும்ப வைக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து துறை செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களில் பெயர்த்தெடுக்கப்பட்ட கல்வெட்டுகளுக்கு பதிலாக புதிதாக கல்வெட்டுகள் வைக்கப்படுகிறது. அதே போன்று, ஏற்கனவே, இருந்த கல்வெட்டுகள் நீக்கப்பட்டு, அந்த அலுவலக அறைகளில் வைக்கப்பட்டிருந்தால் அந்த கல்வெட்டு மீண்டும் அதே இடத்தில் வைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், சென்னை ஓமந்தூரரர் பல்நோக்கு மருத்துவமனையில், பெயர்த்தெடுக்கப்பட்ட புதிய சட்டமன்ற அலுவலக கட்டிடத்துக்கான கல்வெட்டு மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஏற்கனவே இருந்த இடத்தில் கல்வெட்டுகள் வைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: