காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அண்ணா பிறந்த நாள் விழா நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அண்ணா சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும், ஊரகத் தொழிற்துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும் எம்எல்வுமான க.சுந்தர் ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் எம்பி செல்வம், எம்எல்ஏ எழிலரசன், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், மாவட்ட அவைத்தலைவர் சேகரன், ஒன்றிய செலாளர்கள் பி.எம்.குமார்,  பூபாலன், படப்பை மனோகரன், எஸ்.டி.கருணாநிதி, கோபால் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும் திமுக சார்பில் கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகங்களில் உள்ள அண்ணா சிலைக்கு தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சேகரன் தலைமையில் திமுக பேச்சாளர் நாத்திகம் நாகராசன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் அண்ணா நினைவில்லத்தில் உள்ள அவரது சிலைக்கு கலெக்டர் ஆர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், தாசில்தார் காமாட்சி ஆகியோர் இருந்தனர். அதிமுக சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன், அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் பாலாஜி, நகர செயலாளர் என்.பி.ஸ்டாலின்,உள்பட பலர் இருந்தனர்.

காஞ்சி மேற்கு மாவட்ட மதிமுக சார்பில் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மதிமுக மாநில துணைப் பொது செயலாளர் மல்லை சத்யா தலைமையில் அமைப்பு செயலாளர் வந்தியத்தேவன், மாவட்ட செயலாளர் வளையாபதி, நகர செயலாளர் மகேஷ், நெசவாளர் அணி ஏகாம்பரம் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோன்று, முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், சமூக ஆர்வலருமான ஆர்.வி.ரஞ்சித்குமார் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அண்ணா சிலைக்குஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு சங்க மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான பெர்ரி தலைமையில் மாவட்ட தலைவர் தண்டபாணி, நகர தலைவர் துரைராஜ், ஒன்றிய தலைவர் முரளி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகர திமுக சார்பில், அண்ணா பிறந்தநாள் விழா செங்கல்பட்டு மணிகூண்டு அருகில் நடந்தது. செங்கல்பட்டு நகர திமுக செயலாளர் எஸ்.நரேந்திரன் தலைமை வகித்தார். நகர நிர்வாகிகள் ராஜி, மண்ணு, சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர்,  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில், எம்பி செல்வம், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், முன்னாள் நகரமன்ற தலைவர் அன்புச்செல்வன் உள்பட  பலர் கலந்துகொண்டனர். மறைமலைநகர் நகர திமுக சார்பில், திமுக நகர செயலாளர் ஜெ.சண்முகம் தலைமையில், அண்ணா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஆல்பர்ட், கிரிசந்திரன், அசோகன், கருணாநிதி, பார்த்தசாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றிய திமுக சார்பில் பேரூராட்சி வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு திருப்போரூர் முன்னாள் எம்எல்ஏ இதயவர்மன், தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், திருப்போரூர் நகர செயலாளர் தேவராஜ், நகர துணைச் செயலாளர்கள் மோகன், பரசுராமன், நகர நிர்வாகிகள் பலராமன், அஸ்கர் அலி, சந்திரன், ரவி, சந்திரன், சேகர், இளைஞர் அணி நிர்வாகிகள் பாலு, கோபி கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருப்போரூர் ஒன்றிய அதிமுக சார்பில் நகர செயலாளர் ஜி.முத்து, மதுராந்தகம் எம்எல்ஏ மரதகம் குமரவேல், ஒன்றிய செயலாளர்கள் குமரவேல், நந்தகுமார். ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஆனந்தன், வழக்கறிஞர் சிவராமன், நகர ஜெ பேரவை செயலாளர் லவன், முன்னாள் கவுன்சிலர்கள் சேகர், எத்திராஜன், அவைத்தலைவர் ஏழுமலை மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். அதேபோன்று முன்னாள் எம்எல்ஏ தண்டரை மனோகரன் தலைமையில் முருகவேள், வாசுதேவன், சிவராமன், ஜெகதீசன் உள்பட அதிமுகவினர் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். திருப்போரூர் வடக்கு ஒன்றிய ம.தி.மு.க. சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் லோகு தலைமையில் நகர செயலாளர் துரை, நகர அவைத் தலைவர் சம்சுதீன், நகர துணைச் செயலாளர் ஜெயபால் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories: