திருச்சுழி அருகே அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

திருச்சுழி: திருச்சுழி அருகே மறவர் பெருங்குடியில் உள்ளது அரசு உயர்நிலைப்பள்ளி. இங்கு மறவர் பெருங்குடி, மீனாட்சிபுரம், வெள்ளையாபுரம், கல்லுப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த 180க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியின் கழிப்பறையில் தண்ணீர் வசதி போதுமானதாக இல்லை என பெற்றோர்கள் கூறுகின்றனர். பள்ளியில் இருந்து சுமார் 50 அடி தூரமுள்ள மேல்நிலை தொட்டிக்கு சென்று வாளியில் தண்ணீர் எடுத்து வந்து கழிப்பறைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால் மாணவிகள் அவசரத்திற்கு கூட கழிப்பறைக்கு செல்ல முடியாமல் வீட்டிற்கு சென்ற பின்புதான் செல்கின்றனர். இதனால் உடலளவில் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இப்பள்ளியில் ஆழ்துளை போர்வெல் உள்ளது. ஆனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், தண்ணீர் எடுக்க முடியாத நிலை உள்ளது. மேலும் மாணவர்கள் கழிப்பறை முற்றிலும் சேதமடைந்துள்ளதால் பயன்பாடின்றி மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே மாணவ, மாணவியர்கள் நலன் கருதி கழிப்பறையில் போதிய தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: