மேற்கு மண்டலத்தில் பணியாற்றி மாற்றப்பட்ட பதிவுத்துறை அதிகாரிகளின் மலைக்க வைக்கும் சொத்து குவிப்புகள்: லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் கட்ட விசாரணை ஆரம்பம்

சென்னை: பதிவுத்துறையில் மேற்கு மண்டலத்தில் பணியாற்றி தற்போது குற்றச்சாட்டின் அடிப்படையில் மாற்றப்பட்ட அதிகாரிகள் மலைக்க வைக்கும் அளவுக்கு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது தெரியவந்துள்ளது. அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டு காலத்தில் மேற்கு மண்டலத்தில் பணியாற்றிய பல்வேறு துறைகளின் அதிகாரிகள் வசூலில் அமைச்சர்களுக்கு இணையாக கலக்கி வந்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், ஒவ்வொரு துறையிலும் தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் அதிக 10 ஆண்டுகளில் பதிவுத்துறை அதிகாரிகள்தான் பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி குவித்தது தெரியவந்தது. மேலும், அதிமுக மாஜி அமைச்சர்கள் சொத்துக்கள் வாங்கி குவிக்க பதிவுத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்த புகாரின்பேரில், கோவை மாவட்ட பதிவாளர்(தணிக்கை) செல்வக்குமார், ஊட்டி மாவட்ட பதிவாளர்(நிர்வாகம்) செல்வநாராயணசாமி, சிங்காநல்லூர் மாவட்ட பதிவாளர் கரீம் ராஜா, ஈரோடு மாவட்ட பதிவாளர் பெரியசாமி, ஈரோடு பதிவு மாவட்ட உதவி ஐஜி ராஜா, கோவை மாவட்ட உதவி ஐஜி சுரேஷ், கிருஷ்ணகிரி மாவட்ட பதிவாளர் செந்தில்குமார் ஆகிய 7 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். அதில் செந்தில்குமார் மட்டும் குற்றச்சாட்டில் சிக்காதவர். மற்றவர்கள் 6 பேரும், சொத்து குவிப்பு, முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகாரின் அடிப்படையில் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதில் செல்வநாராயணசாமி, தேனி மாவட்டத்தில் பினாமி பெயர்களில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார். இவர், கொடநாடு விவகாரத்தில் விஐபிக்களுக்கு உதவி செய்ததற்காக தங்க நகைகளாக வாங்கி குவித்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இவர், காந்திபுரத்தில் பணியாற்றியபோது உதவியாளராக இருந்த ஒரு நிர்மலமான பெயரை கொண்ட பெண்ணுடன் நெருக்கமாக இருந்தாராம். இவருடன் நட்பு கிடைத்த பிறகு அந்த பெண் பெரிய அளவில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளாராம்.  முன்னதாக செல்வநாராயணசாமி பணிக்கு வராவிட்டாலும் அவரது முத்திரையை அந்த பெண் தொடர்ந்து பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்துள் ளார்.  ஆனால்  அந்த பெண் தன் கையெழுத்தையே முத்திரையின் கீழ் போட்டுள்ள தகவல் தற்போது வௌிச்சத்துக்கு வந்துள்ளது. செல்வநாராயணசாமி மாற்றப்பட்டவுடன், தற்போது மாவட்ட பதிவாளராக உள்ள ஒருவருடன் அந்த பெண் நெருக்கமாகிவிட்டாராம்.

அதேபோல, ஈரோடு மாவட்ட பதிவாளர் பெரியசாமி, தனது மாமியார் பெயரில் பல கோடிக்கு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளாராம். மேலும் தனது பெயரிலும், மாமியார் மற்றும் உறவினர்கள் பெயரிலும் பெரிய அளவில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல, உதவி ஐஜி ராஜாவும் தனது மாமியார் பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளாராம்.

அதேபோல, ஈரோடு மாவட்ட பதிவாளராக இருந்த சுரேஷ், தனது மாவட்டத்தில் வழிகாட்டி மதிப்புக்களை குறைத்து ஏராளமான பதிவுகளை செய்துள்ளாராம். வரன்முறைப்படுத்தாத நிலங்களையும் அதிக அளவில் பதிந்துள்ளார்களாம். அதன்மூலம் பெரிய அளவில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளாராம். மேலும், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாஜி அமைச்சர் தற்போது வரன்முறைப்படுத்ததாக நிலங்களை தற்போது வியாபாரம் செய்கிறாராம். இதற்கு உதவி ஐஜி சுரேஷ்தான் பெரிய அளவில் உதவி செய்தாராம். அதோடு, திருப்பூர் மாவட்டத்தில் போலி ரசீது போட்டு பல கோடி ரூபாய் முறைகேடு நடந்தது. அதில் 13 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் பலர் சம்பந்தப்பட்டனர். ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், சில அதிகாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக பெரிய அளவில் பணம் கைமாறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக மேல் அதிகாரிகளுக்கு சில அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக அறிக்கை கொடுத்தார். அதனால் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதன்பின்னர்தான் சுரேஷ், திருப்பூரில் இருந்து ஈரோடுக்கு மாறுதலாகி வந்தார். இந்த விவகாரத்தில் உதவி ஐஜி சுரேஷ் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சுரேஷின் மனைவியின் சகோதரியின் கணவர் கருணாகரன் மேகாலயாவில் ஐஜியாக உள்ளார். அவர் மூலம், தன் மீது நடவடிக்கை எடுக்காமல் தற்காத்துக் கொண்டார். தற்போதும், போலீஸ் ஐஜி கருணாகரன் மூலம் தனது பதவியை காப்பாற்றிக் கொள்ளவும், லஞ்ச ஒழிப்பு விசாரணையில் இருந்து தப்பிக்கவும் பெரிய அளவில் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல்களை எல்லாம் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. இதனால் விரைவில் இந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories: