நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை அதிகரிக்கும் ஒன்றிய அரசின் அறிவிப்பு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை மணிக்கு 100 கிலோ மீட்டர் அதிகரித்து ஒன்றிய அரசு பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013ம் ஆண்டு காஞ்சிபுரம் சாலையில் நடந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் பல் மருத்துவர் ஒருவருக்கு, 90 சதவீத ஊனம் ஏற்பட்டது. அவருக்கான இழப்பீட்டு தொகையாக 18 லட்சத்து 43 ஆயிரத்து 908 ரூபாயில் இருந்து 1 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 548 ஆக உயர்த்தி வழங்க நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. அந்த தீர்ப்பில், எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்திலும், தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லலாம் என்று ஒன்றிய அரசு 2018ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டுமென உற்பத்தி நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்த வேண்டும்.

அதேபோல இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரித்த உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவில், கடந்த 2013ல் மட்டும் சாலை விபத்தில் 1 லட்சத்து 37 ஆயிரம்பேர் பலியாகியுள்ளனர். இதற்கு கூடுதல் வேகம்தான் முக்கிய காரணம். கடந்த 2019ல் 1 லட்சத்து 51,417 பேர் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர். 4.69 லட்சம்பேர் படுகாயமடைந்துள்ளனர். சாலை மேம்பாட்டையும், இன்ஜின்களின் செயல்பாட்டை அதிகரிக்கவும் வேகம் அதிகரிக்கப்பட்டதாக ஒன்றிய அரசு கூறிய விளக்கத்தை ஏற்க முடியாது. எனவே, 2018ம் ஆண்டு ஒன்றிய அரசு பிறப்பித்த அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. கடந்த 2014ம் ஆண்டு அறிவிப்பின்படி, வாகனங்களுக்கு 60 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தை நிர்ணயிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்த வேண்டும். அதன் அடிப்படையில் புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Related Stories: