கண்ட கண்ட இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள்: நாகர்கோவிலில் ஆக்ரமிப்புகள் அகற்றப்படுமா?

* பொது மக்கள் கடும் அவதி    

* அதிகாரிகள் கவனிப்பார்களா?

நாகர்கோவில்: நாகர்கோவிலில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்கள் ஒருபுறம், சாலை விரிவாக்கத்துக்கு ஒத்துழைக்க மறுப்பவர்கள் மறுபுறம், சாலைகளில் கண்டபடி வாகனங்களை நிறுத்தி செல்பவர்கள், ஒருவழி பாதைகளில் அத்துமீறி பயணிக்கும் வாகனங்கள், பாதாள சாக்கடை பணிகளால் மோசமான சாலைகள் என்று கடும் போக்குவரத்து நெருக்கடியால் பொது மக்கள் தினசரி பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா லாக்டவுன் படிப்படியாக முடிவடைந்து இயல்புநிலை திரும்பி வருகிறது. ஆனால் நாகர்கோவில் பகுதியில் சாலைகள், பிரதான சந்திப்புகளில் நடைபாதைகளை ஆக்ரமித்து நிரந்தர கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், மக்கள் நடமாடவும் முடியாமல், வாகனங்களை நிறுத்தவும் சரியான இடமின்றி தவித்து வருகின்றனர்.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பறக்கை விலக்கு சந்திப்பு பகுதியில் இருந்து எட்டுக்கடை பஜார் வரையிலான சாலை விரிவாக இருந்தது. இந்த பகுதியில் முதலில் தற்காலிகமாக கடைகள் அமைத்து பொருட்களை வைத்தவர்கள், தற்போது நடைபாதைகளை மறித்து நிரந்தரமாகவே கடைகளை அமைத்து விட்டனர். இதே போல் டதி பள்ளி சந்திப்பிலும், காலியாக இருந்த பகுதிகளில் தற்போது 10க்கும் மேற்பட்ட கடைகள் முளைத்துள்ளன. சுக்குக்காப்பி,  டீக்கடை, ஹோட்டல்கள், பழக்கடைகள் என்று பிரதான சாலைகள் வரை குடிசைகள் அமைத்து கடைகளை வைத்து ஆக்ரமித்து உள்ளனர்.

இதனால் வாகனங்களை அந்த பகுதியில் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு வருபவர்களும், தங்களது வாகனங்களை சாலைகளில் கண்ட கண்ட இடங்களில் நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு இங்கு தாறுமாறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அகற்றி, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனாலும் ஆக்ரமிப்பு கடைகள் காரணமாக, தொடர்ந்து வாகனங்கள் இடையூறாக நிறுத்தப்பட்டு வருகின்றன. செம்மாங்குடி சாலை, கேப் ேராடு, கே.பி ேராடு என்று முக்கிய சாலைகளில் நடைபாதை ஆக்ரமிப்பு கடைகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

எனவே நடைபாதை வியாபாரிகளை முறைப்படுத்தி, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம், பொது மக்களுக்கு இடையூறு இல்லாத இடங்களில் கடைகள் நடத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது விஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

புதிய பஜார்கள்

கேப் சாலையில் அண்ணா பஸ் நிலையம் பகுதியில் நடைபாதை கடைகளை அகற்றி, அவர்களுக்கு பூங்கா வியூ தெருவில் நாஞ்சில் பஜார் அமைத்து தரப்பட்டது. இதேபோல் மேலும் 3 பஜார்கள் உருவாக்கி நடைபாதை வியாபாரிகளை அங்கு மாற்ற, முந்ைதய மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தார். ஆனால், தற்போது மாற்று பஜார் பணிகள் கிடப்பில் உள்ளன. எனவே மாநகராட்சி முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையோரம் கடைகள் முளைத்துள்ளன.

கார்கள் முறைப்படுத்தப்படுமா?

வேப்பமூடு சந்திப்பு முதல் சுரங்கப்பாதை வரை இருவழி சாலைக்காக பெட்ரோல் பல்க், பொன்னப்பநாடார் வாகன நிறுத்தம் ஆகியன பலத்த போராட்டத்திற்கு பிறகு மாற்றப்பட்டன. ஆனால் சாலை விரிவாக்கம் நடக்காமல் தற்போது அந்த பகுதி கடை உரிமையாளர்கள், கடைகளுக்கு வருவோர் தங்களது  வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி வைக்கின்றனர். இதனால் முன்பை விட அதிகமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையையும் விரிவாக்கம் செய்ய வேண்டும். இதற்காக தற்போது யாருமே பயன்படுத்தாத  சுரங்கப்பாதை நுழைவு வாயிலையும் தெற்கு பகுதிக்கு மாற்றி சாலையை இருவழி சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: