சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்த அனைத்து திட்டங்களும் மக்களுக்கு பயன்படக்கூடியது: எர்ணாவூர் நாராயணன் பாராட்டு

சென்னை: சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி ஒவ்வொரு திட்டங்களையும் நிறைவேற்றும் வகையில் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை ஆரம்பத்தில் இருந்து திமுக எதிர்த்து வருகிறது. நீட் தேர்வால் கிராம ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைப்பது சவாலாக உள்ளது.

நீட் தேர்வு அச்சத்தால் 14 மாணவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் முயற்சிகளை மேற்கொள்வோம் என தேர்தல் அறிக்கையிலும் திமுக அறிவித்திருந்தது. தமிழகத்தில் நீட் தேர்வால் 14 மாணவர்களை பறிகொடுத்த நிலையில், தற்போது மேட்டூர் பகுதியை சேர்ந்த தனுஷை பலிவாங்கியுள்ளது. இதனால், சட்டப்பேரவையில் தமிழக அரசு சட்டரீதியாக நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றி இருப்பது மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றும் வகையில் அமைந்திருக்கிறது.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும்  மசோதாவுக்கு அனைத்து கட்சியினரும் ஒருமனதாக ஆதரவளிக்கவேண்டும். மேலும் தேர்தல் வாக்குறுதிப்படி ஏழை, எளிய மக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் ரத்து செய்ய உத்தரவிட்டிருப்பது பாராட்டுக்குரியது. சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகள் அனைத்தும்  அறிவிப்பாக இல்லாமல் முழுவதுமாக செயல்படுத்தப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மக்களுக்கு பயன்படக்கூடிய முழுக்க முழுக்க முத்தான திட்டங்களை செயல்படுத்தி இருக்கும் தமிழக அரசுக்கு சமத்துவ மக்கள் கழகம் சார்பில் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: