நீட் தேர்விற்கு நிரந்தர விலக்கு பெறும் வகையில் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற முதல்வர் அனைத்து முயற்சியும் எடுப்பார்: அரசியல் கட்சி தலைவர்கள் நம்பிக்கை

சென்னை: நீட் தேர்விற்கு நிரந்தர விலக்கு பெறும் வகையில் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து முயற்சிகளையும் எடுப்பார் என்று அரசியல் கட்சி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத தமிழக மாணவர்கள் அனிதா உள்ளிட்ட 14 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இந்த தற்கொலைகளுக்கு அதிமுக ஆட்சி தான் பொறுப்பாகும். இந்த நிலையில் நீட் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்கு பெறுகிற வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் தாக்கல் செய்திருக்கிற மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு உரிய அழுத்தம் தருகிற அனைத்து முயற்சிகளையும், முதல்வர் மேற்கொள்வார் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மத்திய பாஜ அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி உரிய அழுத்தத்தைக் கொடுப்பார்கள். இதன்மூலம், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறுகிற தமிழக அரசின் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. சரியான நேரத்தில், சரியான முடிவெடுத்து நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுகிற வகையில் முதல்வர் எடுத்திருக்கிற நடவடிக்கை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளின் ஆதரவோடு வெற்றி பெறும்.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): ‘நீட்’ தேர்வு முறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, தமிழக மக்கள் ஒன்றுபட்டு போராடி வருகிறார்கள். சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய முந்தைய அரசு அதனை உணர்வுபூர்வமாக நிறைவேற்ற முயற்சிக்கவில்லை. சட்ட போராட்டம் நடத்துவதிலும் அக்கறை காட்டவில்லை. பாஜ ஒன்றிய அரசிடம் விசுவாசம் காட்டி, தமிழக மாணவர்களை வஞ்சித்து விட்டது.

இந்த நிலையில் ‘நீட்’ தேர்வுமுறையை கைவிடவும், தமிழ்நாட்டின் கல்வி முறைக்கு தக்கபடி, சமூக நீதியை உறுதி செய்யவும், கிராமப்புற சுகாதாரத்தை மேம்படுத்தவும், சமத்துவம் மற்றும் சமவாய்ப்பு வழங்கும் வகையிலும் மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கைக்கு வழிவகை செய்யும் புதிய சட்டத்தை தமிழக சட்டமன்றம் நிறைவேற்றியிருப்பதையும் சமூக நீதி காக்கும் சட்டப் போராட்டத்தை துணிச்சலாக முன்னெடுத்துள்ள முதல்வரையும் வாழ்த்தி பாராட்டுகிறோம். மாநில உரிமை காக்கும் போராட்டத்தில் முதல்வர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் ஒன்று திரண்டு ஆதரிக்க வேண்டும்.

நெல்லை முபாரக் (எஸ்.டி.பி.ஐ.கட்சி தலைவர்): ஏழை எளிய கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை தகர்க்கும், நீட் எனும் நுழைவு தேர்வுக்கு எதிராக, தமிழக சட்டமன்றத்தில் சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ள தமிழக அரசின் நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதாவை கொண்டுவந்து அதனை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் விலக்கு சட்ட மசோதாவுடன், நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும் விரைந்து நடத்தி நீட் தேர்வுக்கு எதிரான தீர்ப்பைப் பெற தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் கல்விக்கான மாநில உரிமைகளில் மத்திய அரசின் தலையீடை தடுத்து நிறுத்தவும், கல்வியை கார்ப்பரேட் மயமாக்கும் முயற்சிக்கு எதிராகவும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து, சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெற்றிட வேண்டும்.

Related Stories: