குஜிலியம்பாறையில் அலங்கோலமான அரசு குடியிருப்பு : பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் 42 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அரசு குடியிருப்பு கட்டிடத்தை, பராமரிப்பு பணி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குஜிலியம்பாறையில் காளியம்மன் கோவில் அமைந்துள்ள சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. கோயில் எதிரே கடந்த 42 ஆண்டுகளுக்கு முன்பு, குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து வட்டார வளர்ச்சி அலுவலர் தங்குவதற்கு அரசு குடியிருப்பு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. நாளடைவில் போதிய பராமரிப்பு இன்றி இருந்ததால் கட்டிடங்கள் விரிசல் விட தொடங்கியது. கட்டிடங்கள் பழுந்தடைந்த நிலையில் காணப்பட்டதால் குடியிருப்பு பயன்பாட்டை தவிர்த்தனர். இதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடு இல்லாமல் இக்கட்டிடம் இருந்து வருகிறது.

இதனால் கட்டிடத்திற்கு உள்ளே, வெளியே முட்புதர்கள் மண்டி காணப்படுகிறது. குடியிருப்பு பகுதி நடுவே உள்ள இக்கட்டிடத்தில் முட்புதர் மண்டி கிடப்பதால், விஷ ஜந்துக்கள் குறித்த அச்சம் மக்களிடையே உள்ளது. மேலும் இதே நிலை நீடித்தால் இக்கட்டிடம் இடிந்து விழும் நிலை உள்ளது. எனவே அசம்பாவித சம்பவம் நடக்கும் முன்பாக, பழுதடைந்த அரசு குடியிருப்பு கட்டிடத்தை பராமரிப்பு செய்து, அரசு அலுவலக பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: