வாக்காளர் வரைவு பட்டியலை அனுப்பும் போது இறந்தவர்களின் பெயரை எடுக்காமல் அனுப்புகிறது: தேர்தல் கமிஷன் மீது திமுக குற்றச்சாட்டு

சென்னை: தேர்தல் கமிஷன் வாக்காளர் வரைவு பட்டியலை அனுப்பும் போது 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் பெயரை எடுக்காமல் அனுப்புகிறது என்று சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் பூம்புகார் தொகுதி திமுக உறுப்பினர் நிவேதா எம்.முருகன் பேசியதாவது: சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. எனது தொகுதியை பொறுத்தவரையில் 100 ஊராட்சிகள் இருக்கின்றன. 70 கி.மீ. சுற்றளவு இருக்கிறது. 1 ஊராட்சிக்கு ரூ.5 லட்சம் என்று வைத்துக் கொண்டாலே, 100 ஊராட்சிகளுக்கு ரூ.10 கோடி தேவைப்படும். கொடுப்பது ரூ.3 கோடி தான். அது போதாது. ஆனால், தமிழக அரசோ அதிகமாக, எவ்வளவோ பல கோடி ரூபாய்கள் திட்டங்களுக்காக செலவு செய்து கொண்டிருக்கிறது.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.5 கோடி கொடுத்தால், ஏதுவாக இருக்கும். இது அனைத்து உறுப்பினர்களின் வேண்டுகோள் ஆகும். அரசியல்வாதிகளுக்கு வங்கிகளில் லோன் தருவதில்லை. எனக்கு இல்லை. சரியாக லோன் கட்டுகின்ற அனைவருக்கும் முன்னுரிமை கொடுத்து லோன் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியல் வரைவு அனுப்பும்போதெல்லாம், அப்பட்டியலில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் பெயரை எடுக்காமல் அனுப்புகிறது. அதற்கு தனி கவனம் எடுத்து இறந்தவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் வராத அளவிற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் 10 சதவீதத்திற்கு மேல் இறந்தவர்களுடைய வாக்கு இருக்கின்ற காரணத்தால், வாக்காளர் பட்டியலில் அதிகமான தொகை ஏறிக்கொண்டே இருக்கின்றது. அதனால், அதில் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: