நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு கொண்டு வந்த தீர்மானத்துக்கு அனைத்து கட்சிகளும் வரவேற்பு: பேரவையில் காரசார விவாதம்; பாஜ மட்டும் வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று நீட் தேர்வு தொடர்பான சட்ட மசோதா ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: நீட் தேர்வு அறிவிப்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெளியானது. ஆனால், 2017ம் ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக ஆட்சி காலத்தில் சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இந்த நிலையிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தோம். அதிமுகவை பொறுத்தவரை நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு கொண்டு வரப்பட்டுள்ள இந்த தீர்மானத்தை வரவேற்கிறோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: நீட் பிரச்னையை பொறுத்தவரைக்கும், இந்த சட்டமன்றத்தில் 2 மசோதாக்களை நிறைவேற்றி, அரசின் மூலமாக நாம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தோம். அதை அவர்கள் திருப்பி அனுப்பி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், அந்தத் தகவலை ஏன் சட்டமன்றத்தில் அன்றைக்கு இருந்த அதிமுக ஆட்சி சொல்லவில்லை?.  ஏனென்றால், மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்து கொண்டு மாளக்கூடிய ஒரு கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. அதை தடுத்து நிறுத்துவதற்காக ஒருங்கிணைந்து இந்த அவையில் இருக்கக்கூடிய எல்லாக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், இந்த தீர்மானத்தை நிறைவேற்றி தர வேண்டும்.

செல்வப்பெருந்தகை: நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட 14 குழந்தைகளின் சாவுக்கு யார் காரணம்?  (அப்போது சபாநாயகர் மு.அப்பாவு அவருக்கு தொடர்ந்து பேச அனுமதி மறுத்தும், அவர் பேச முயன்றார்)

முதல்வர் மு.க.ஸ்டாலின்: நல்ல நோக்கத்திற்காக இந்த சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டிருக்கிறது. மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதற்கு யார் காரணம்?. அது அவரவர்கள் மனசாட்சிக்கு நன்றாக தெரியும். எனவே, அதை விவாதித்துக் கொண்டிருந்தால், இந்த சட்டமுன்வடிவினை நிறைவேற்றுவதில் சங்கடங்கள் இருக்கின்றன. சச்சரவுகள் இருக்கின்றன என்ற ஒரு கெட்ட பெயர் நம்முடைய அரசுக்கு வந்துவிடும். இங்கே இருக்கக்கூடிய உறுப்பினர்களுக்கு வந்துவிடும். நான் செல்வப்பெருந்தகையிடம் கேட்டுக்கொள்ள விரும்புவது, இந்தத் தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றுகிற நேரத்தில், சச்சரவுகளை ஏற்படுத்த வேண்டாம். குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

பாஜ சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன்: நீட் தேர்வு 21-12-2010 அன்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வரப்பட்டது.

சபாநாயகர் அப்பாவு: நீங்கள் 2010ல் இருந்து தொடங்குகிறீர்கள். இப்போது 2021. 11 ஆண்டுகள் பற்றி பேசினால் தாங்காது.

நயினார் நாகேந்திரன்: நீட் தேர்வு வந்த பிறகு, குறிப்பிட்ட 3 பாடப்பிரிவுகளை எடுத்துப் படிக்கும் மாணவர்களின் சதவீதம் 50ல் இருந்து 85 ஆக உயர்ந்துள்ளது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: புள்ளி விவரத்தை பற்றி பேசும் போது ஆதாரத்துடன் தான் பேச வேண்டும். பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது.

நயினார் நாகேந்திரன்: கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் நீட் தேர்வை 13 லட்சத்து 61 ஆயிரத்து 945 பேர் எழுதினார்கள். இதில், 7 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் 99 ஆயிரம் பேர் தேர்வு எழுதி, அதில் 57,219 பேர் தேர்ச்சி பெற்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றார்கள்?, எவ்வளவு பேர் கலந்துகொண்டார்கள் என்பதல்ல முக்கியம். எவ்வளவு பேர் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள். நேற்று உயிரிழந்த தனுஷ் என்ற மாணவனை சேர்த்து 15 பேர் மாண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் மனதில் வைத்து கொண்டு தான், இந்த சட்ட முன்வடிவை கொண்டு வந்திருக்கிறோம். ஆகவே, அவர்களின் தியாகம் வீண்போகக்கூடாது என்பதுதான் இந்த அரசினுடைய லட்சியம். எனவே, அதற்கு ஏற்ற வகையில் உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும்.

நயினார் நாகேந்திரன்:- இந்த மசோதாவை எதிர்த்து பாஜ வெளிநடப்பு செய்கிறது. (இதையடுத்து அவரது தலைமையில் பாஜ உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்).

இதை தொடர்ந்து பேசிய அனைத்து கட்சியை சார்ந்த சட்டமன்ற தலைவர்களும் தீர்மானத்தை வரவேற்பதாக தெரிவித்தனர். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: