ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து ஆணைய விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவு: முதல்வர் பேச்சு

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தின் விசாரணையை விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதி விசாரணை செய்ய அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக் காலத்தை நீட்டித்துக் கொண்டே வந்திருக்கிறது கடந்த அதிமுக அரசு. ஆட்சி அமைந்ததும் அந்த ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை இந்த அரசு பெற்றிருக்கிறது. இறுதி அறிக்கையை பிப்ரவரி 22ம் நாளுக்குள் கொடுக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறோம். அறிக்கை கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை நிச்சயமாக நாங்கள் எடுப்போம்.

பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கைப் பொறுத்தவரையில், அதனை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆட்சி பொறுப்பேற்றவுடன் முத்தரசி என்ற சிபிசிஐடி பெண் எஸ்.பி. அதிகாரி இதற்காக நியமிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைத்திடவும், வழக்கினை விரைந்து நடத்திட முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரிக்க கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையையும் விரைந்து முடிக்கச் சொல்லியிருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: