பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் பற்றி விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய முடியாது: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில்; இடைக்கால தீர்ப்பு நீதிபதிகள் அதிரடி

புதுடெல்லி: ‘பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் பற்றி விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாது,’ என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த வழக்கில் 3 நாட்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர். இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக சர்வதேச நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன. இது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது பற்றி உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் கீழ் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கு 2 பக்கங்களே கொண்ட பதில் மனுவை ஒன்றிய அரசு தாக்கல் செய்ததால் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம், விரிவான பிரமாணப் பத்திர தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. இதற்கு ஒன்றிய அரசு தரப்பிலும் கடந்த 7ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, “இந்த விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு நலன் அனைத்தும் அடங்கியுள்ளது.

அது பற்றி பொதுவெளியில் விரிவாக விவாதிக்க முடியாது. எனவே, விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாது. இருப்பினும், இது பற்றி நிபுணர்கள் குழு அமைத்து விசாரணை நடத்த அரசு சம்மதித்துள்ளது. ஒட்டு கேட்பு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து நீதிமன்றத்தில் வெளிப்படையாக விசாரிக்கப்படும் பட்சத்தில் அது ஆபத்தான ஒன்றாக அமைந்துவிடும். பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தவில்லை என கூறினால், அது பயங்கரவாத குழுக்களுக்கு சாதமாகி விடும். அதேப்போன்று பயன்படுத்தினோம் என்று தெரிவித்தாலும் பல பின் விளைவுகளை ஏற்படும்,’’ என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்கூறியதாவது: கடந்த முறை பெகாசஸ் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாக உறுதியளித்து விட்டு, தற்போது முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் நிபுணர் குழு அமைத்து நீங்கள் ஆய்வு செய்யுங்கள். அதில், நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. அதேப்போன்று பாதுகாப்பு தொடர்பான விஷங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் எங்களுக்கு இல்லை. ஆனால், பெகாசஸ்  உளவு சாதனங்கள் மூலம் இந்திய குடிமக்களின் தொலைப்பேசி அழைப்புகள் ஒட்டு கேட்கப்பட்டதா?, இல்லையா? அதுதான் நீதிமன்றத்திற்கு தெரிய வேண்டும்.

இந்த விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நியாயமான வாய்ப்பு ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவை அது மதிக்க தவறி விட்டது. இருப்பினும், இந்த வழக்கில் அனைத்து மனுதாரர்களின் வாதங்களையும் நீதிமன்றம் பதிவு செய்துள்ளது. அவற்றை அடிப்படையாக கொண்டு, இந்த விவகாரத்தில் நீதிமன்றமே தன்னிச்சையாக மூன்று நாட்களுக்குள் இடைக்கால தீர்ப்பை வழங்கும். பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்வது தொடர்பான முடிவை ஒன்றிய அரசு மாற்றிக் கொள்ளும் பட்சத்தில், அதை நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம். இவ்வாறு நீதிபதிகள் கூறி தீர்ப்பை 3 நாட்களுக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: