நெல்லை டவுனில் பைப்லைனில் ஏற்பட்ட கசிவால் சாலையில் வழிந்தோடும் குடிநீர்

நெல்லை : நெல்லை டவுனில் பராமரிப்பின்றி பைப்லைனில் ஏற்பட்ட கசிவால் அதிக அளவில் வெளியேறும் குடிநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதைத் தடுக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. நெல்லை டவுன் கீழ ரதவீதியில் குடியிருப்புவாசிகள் நலன்கருதி அமைக்கப்பட்ட பைப்லைனில் பராமரிப்பின்றி கசிவு உருவானது. இதனால் அதில் இருந்து அதிக அளவில் வெளியேறும் குடிநீரானது வீதிகளில் வழிந்தோடுகிறது.

இதனால் அவதிப்படும் மக்கள், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற பாதாள சாக்கடை குழாய் பதிப்பு பணிகளுக்குப் பிறகு இவ்வாறு கசிவு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர். மேலும், இதை உடனடியாக சரிசெய்யாத காரணத்தால் அதிக அளவில் குடிநீர் வெளியேறி ஆறாகப் பெருக்கெடுத்து வீணாக ஓடுகிறது என்றனர்.

இதேபோல் அருகேயுள்ள சத்தியமூர்த்தி தெரு உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் பைப்லைனில் ஏற்பட்ட கசிவால் வெளியேறும் குடிநீர், வீதிகளிலும், சாலைகளிலும் வீணாக வழிந்தோடுகிறது. நெல்லை மாநகர பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வதில்  பிரச்னைகள் நிலவுவதால் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் மக்கள் சாலை மறியலில் ஈடுபடுவதும், லாரிகள் கொண்டுவந்து விநியோகிக்கப்படும் குடிநீரை பிடித்துச்செல்ல குடங்களுடன் முண்டியடித்துச் செல்லும் சூழலும் நிலவும் நிலையில், நெல்லை டவுன் பகுதியில் குடிநீர் வீணாக வெளியேறுவதை தடுக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் மாநகரில் அனைத்துப் பகுதிகளிலும் வசித்து வரும் மக்களுக்கும் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Related Stories: