நீட் தேர்விலிருந்து விலக்கு பெற அரசு முயற்சி எடுக்கிறது; மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்..! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

மீனம்பாக்கம்: சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை யாரும் புறந்தள்ளிவிட முடியாது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அரசு எல்லா வகையிலும் முயற்சி எடுத்து வருகிறது. எனவே மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மதுரையில் இருந்து விமானம் மூலம் நேற்றிரவு 11.30 மணியளவில் சென்னை வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 28,91,021 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது மிக பெரிய சாதனை. தமிழகத்தில் இதுவரை 4,03,13,112 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 6 கோடியே 6 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.

எனவே 66 சதவீதத்துக்கும் மேலாக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தமிழக மக்களிடையே பெரிய அளவிலான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் இருந்து தடுப்பூசிகள் போதவில்லை, மக்கள் கூடுதலாக வந்துவிட்டனர் என்று தகவல்கள் வந்தன. அவ்வாறு போட முடியாமல் சென்றவர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி வைத்து கொண்டு, இன்று அவர்களை தொலைபேசியில் அழைத்து தடுப்பூசி போடப்படும். இதே போல் வாரத்திற்கு ஒருமுறை மெகா கேம்ப் நடத்த இருக்கிறோம். எனவே ஒன்றிய அரசு, தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளோம். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதை நிறைவேற்றும் விதத்தில், தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இந்த தீர்மானம், கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் போல் இல்லை. நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்துள்ள பரிந்துரை, சட்ட வல்லுநர்களின் பரிந்துரையுடன் கூடிய மிகச்சிறந்த ஒரு தீர்மானம். இந்த தீர்மானத்தை யாரும் எளிதாக புறந்தள்ளிவிட முடியாது. இந்த தீர்மானம் சட்ட நுணுக்கங்களுடன் கூடியது. எனவே தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும், நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிச்சயம் வெற்றி பெரும். எனவே மாணவர்களிடம் மன்றாடி கேட்டு கொள்கிறோம். நீங்கள் இந்த உலகில் வாழ்ந்தே தீர வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான எல்லா முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. எனவே மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. மாணவர்கள் தைரியத்துடன் தேர்வுகளை அணுக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: