நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 14,298 நீர்நிலைகளில் திடக்கழிவுகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை

* காவல்,வருவாய், உள்ளாட்சி துறைகள் இணைந்து செயல்பட வேண்டும்

* முதன்மை தலைமை பொறியாளர் உத்தரவு

சென்னை: நீர்நிலைகளில் திடக்கழிவுகளை கொட்டுவதை தடுக்க காவல், வருவாய், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து செயற்பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்குமாறு நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் 2வது வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பருவமழையின்போது இயல்பான அளவை காட்டிலும் கூடுதலாக மழை பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக நீர் வழித்தடங்களான ஆற்றுப்படுகைகள், கால்வாய், வாய்க்கால்களில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய மாவட்டங்களில் நீர்வழித்தடங்களில் செடி, கொடி போன்ற தாவரங்களை அகற்றுவது, வண்டல் மண்ணை தூர்வாருவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள ரூ.11.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டு அடுத்த வாரத்திற்குள் பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீர்வளத்துறை கட்டுபாட்டில் உள்ள 14,298 நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் திடக்கழிவுகள் கொட்டப்படுவதால், அந்த நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

மேலும்,பருவமழை காலங்களில் கால்வாய்களில் மழை நீர் தங்கு தடையின்றி செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், சில நேரங்களில் மழை நீர் குடியிருப்பு பகுதிகளுக்கு புகும் நிலை ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி அனைத்து கோட்ட செயற்பொறியாளர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி,  உள்ளாட்சி நிர்வாகம், காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் நீர்நிலைகளில் திடக்கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்.

மேலும், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு திருப்பும் வகையில் திட்டமிட வேண்டும். இந்த திட்டத்தை அடுத்த வரும் ஆண்டுகளில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையின் முக்கிய நீர் வழித்தடங்களில் தூர்வாருவது, அகலபடுத்துவது, வெள்ள தடுப்பு பணிகளை முடித்தவுடன் இது தொடர்பாக அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: