புரட்டாசி தொடங்க உள்ளதால் காசிமேட்டில் மீன் வாங்க அலைமோதிய கூட்டம்: அதிக விலை இருந்தும் வாங்கி சென்றனர்

சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வாங்குவதற்கு பொதுமக்கள், வியாபாரிகள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை முதல் புரட்டாசி மாதம் தொடங்க உள்ளதாலும், அந்த மாதம் முழுவதும் பலர் அசைவம் சாப்பிட மாட்டார்கள் என்பதாலும், நேற்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அலைமோதியது. புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருக்க வேண்டும் என்பதால், அதற்கு முன்னதாக ஆசைதீர அசைவம் சாப்பிடலாம் என்பதற்காக பொதுமக்கள் ஏராளமானோர் மீன் வாங்க நேற்று அதிகாலை முதலே காசிமேட்டில் திரண்டனர். இதன் காரணமாக, மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும் அசைவ பிரியர்கள் அதிகளவு மீன்களை வாங்கிச் சென்றனர்.

இதுகுறித்து அகில இந்திய மீனவர் சங்க செய்தி தொடர்பாளர் நாஞ்சில் ரவி கூறுகையில், ‘காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக 200 டன் மீன்கள் பிடித்து வரப்படும். ஆனால் தற்போது டீசல் விலை உயர்வு காரணமாக பெரும்பாலான விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக 90 டன் மீன்கள் மட்டும் விற்பனைக்கு வந்தது. இதில், வஞ்சிரம் 680 ரூபாய்க்கும், சீலா 470 ரூபாய்க்கும், இறால் 350 ரூபாய்க்கும், நண்டு 220 ரூபாய்க்கும், பால் சுறா 300 ரூபாய்க்கும், கருப்பு வவ்வால் 460 ரூபாய்க்கும், வெள்ளை வவ்வால் 350 ரூபாய்க்கும், சங்கரா 300 ரூபாய்க்கும், தும்பிலி 160 ரூபாய்க்கும், வெள்ளை கிழங்கான் 360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.அடுத்த வாரம் புரட்டாசி தொடங்க உள்ளதால் அசைவ பிரியர்கள் அதற்கு முன்பாக மீன் சாப்பிடும் ஆசையில், அதிகளவு வாங்கி சென்றனர்,’ என்றார்.

Related Stories: