பேரவையில் அறிவிக்கப்பட்ட 112 அறிவிப்பை நிறைவேற்ற செயல்படுத்தும் குழு: அறநிலையத்துறை உயர் அதிகாரி தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள 112 அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், ஆணையர் குமரகுருபரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நடப்பாண்டின் அறிவிப்புகளை விரைந்து செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு அமைச்சர் சேகர்பாபு மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு ேநரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, கோயிலுக்கு வரும் பக்தர்களிடம், கோயில்களில் என்ன மாதிரியான வசதிகள் செய்து வேண்டும் என்பது தொடர்பாக அவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், ஊழியர்களிடமும், நிர்வாக ரீதியாக உள்ள பிரச்னைகள் தொடர்பாக கேட்டறிந்தார். தொடர்ந்து, பக்தர்கள், ஊழியர்கள் விடுத்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அறநிலையத்துறை சார்பில் 112 அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட முடிவடையாத நிலையில் அறநிலையத்துறை அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் முழு வீச்சில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதன்காரணமாகதான், அறநிலையத்துறையின் முதல் அறிவிப்பான நிதிவசதியற்ற கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதேபோன்று அறிவிக்கப்பட்டுள்ள மீதமுள்ள 111 கோரிக்கைளை விரைந்து செயல்படுத்தும் வகையில் அமைச்சர் சேகர்பாபு உத்தரவின் பேரில் ஆணையர் குமரகுருபரன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியில் கூடுதல் ஆணையர்கள் கண்ணன், திருமகள், கவிதா, இணை ஆணையர்கள் வான்மதி, கவிதா பிரியதர்ஷினி உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினரிடம் சட்டப்பேரவை அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் தனித்தனியாக பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அறிவிப்புகளை நடப்பாணடிலேயே செயல்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: