அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்ட பயன்கள் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை தயார் செய்யவில்லை: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை: அதிமுக ஆட்சியில் 2016 முதல் செயல்படுத்தப்பட்டு வந்த குடிமராமத்து திட்டத்தால் ஏற்பட்ட பயன்கள் தொடர்பாக மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்யவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் குடிமராமத்து திட்டம் கடந்த 2016 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் வாய்கால்கள், கால்வாய்கள், ஏரிகள், மதகுகள், உபரி நீர் போக்கிகளை பலப்படுத்துதல் மற்றும் மறுகட்டுமானம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த 2016ல் 30 மாவட்டங்களில் 1513 குடிமராமத்து பணிகளில் 1512 பணிகளும், கடந்த 2017-18ல் 30 மாவட்டங்களில் ரூ.321 கோடியில் 1479 பணிகளும், 2019-20ம் ஆண்டில் 30 மாவட்டங்களில் ரூ.298 கோடியில் 1832 பணிகளும், 2020-21ம் ஆண்டில் 34 மாவட்டங்களில் ரூ.498 கோடியில் 1397 பணிகள் என மொத்தம் ரூ.1417 கோடியில் 6211 பணிகள் எடுத்து கொள்ளப்பட்டன. இதில், 5866 பணிகள் முடிக்கப்பட்டன. 265 பணிகள் தற்போது வரை முன்னேற்றத்தில் உள்ளது. பொதுவாக இது போன்ற சிறப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டால் அது குறித்து ஏற்பட்ட பயன்கள் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த திட்டத்தினால் எதுவும் பயன்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மறு ஆய்வு செய்யப்படவில்லை. இதனால், இந்த திட்டத்தின் கீழ் பயன்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் எந்த விவரம் இல்லை. இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர் சதீஷ் லட்சுமணன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் ஒவ்வொரு கோட்ட செயற்பொறியாளர்களிடம் கேட்டிருந்தார். இதில், பெண்ணையாறு கோட்டம், தாமிரபரணி கோட்டம், கொசஸ்தலையாறு கோட்டம், வெள்ளாறு கோட்டம் உட்பட பெரும்பாலான கோட்ட செயற்பொறியாளர் அலுவலகங்கள் மூலம், குடிமராமத்து திட்டத்தினால் ஏற்பட்ட பயன்கள் குறித்த மதிப்பீட்டு அறிக்கைகள் இத்துறையின் மூலம் தயார் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரியை புனரமைத்து பணிகள் மேற்கொள்ள உரிய மதிப்பீடு தயாரித்து கருத்து சமர்ப்பிக்கப்பட்டு நிதி பெறப்பிட்ட பின் ஏரி புனரமைப்பு பணிகளை நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் மூலம் முழுமையாக முடிக்கப்படும். குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிக்கரை பலப்படுத்தும் பணி, மதகு சீர் செய்யும் பணி, மதகு மறுகட்டுமானம் செய்யும் பணி, கலங்கல் சீர் செய்யும் பணி, கால்வாய் வரத்துக்கால்வாய் மற்றும் வழிந்தோடி கால்வாய் தூர்வாரி சீர் செய்யும் பணி ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

குடிமராமத்து திட்டத்தில் ஏரியை புனரமைப்பு  பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மழை  நீரை முழு கொள்ளவு நிரப்பி விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்த வழிவகை செய்யப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வந்த குடிமராமத்து திட்டத்தால் எந்தவித பயனும் ஏற்பட்டுள்ளதா என்பதே தெரியாமல் போய் விட்டது. இதனால், இந்த திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ரூ.1,417 கோடி வீண் என்பது மட்டும் ஊர்ஜிதமாகியுள்ளது. எனவே, இந்த திட்டத்தில் கீழ் ஒதுக்கீடு செய்த நிதி தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: