நெல்லை டவுனில் குழாயில் கசிவு ஏற்பட்டு சாலையில் ஆறாக ஓடும் குடிநீர்

நெல்லை: நெல்லை டவுன் கிழக்கு ரதவீதியில் குடிதண்ணீர் குழாயில் கசிவு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வீணாக ஓடுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நெல்லை டவுண் கிழக்கு ரதவீதி சாலையில் பதிக்கப்பட்டுள்ள குடிதண்ணீர் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதால் அதிகளவு குடிநீர் வெளியேறி சாலையில் வீணாக ஓடுகிறது. இச்சாலையில் சமீபத்தில் நடைபெற்ற பாதாள சாக்கடை குழாய் பதிப்பு பணிகளுக்குப் பிறகு இந்த குடிதண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது என்று இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் லேசாக இருந்த நீர்க்கசிவு தற்போது அதிகரித்துள்ளதால் அதிகளவு குடிதண்ணீர் வெளியேறி சாலைகளில் வீணாக ஓடுகிறது. இதேபோல் அருகிலுள்ள சத்தியமூர்த்தி தெருவிலும் குடிதண்ணீர் குழாயில் கசிவு ஏற்பட்டு குடிதண்ணீர் வீணாகி வருகிறது. நெல்லை மாநகர பகுதிகளில் சீராக குடிதண்ணீர் விநியோகம் செய்வதில் பல பிரச்னைகள் இருப்பதால் பல இடங்களில் குடிதண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபடுவதும், குடிதண்ணீர் லாரிகள் வந்தவுடன் முண்டியடித்துக் கொண்டு குடிதண்ணீர் பிடிக்கச் செல்லும் சூழலும் உள்ளது.

இந்நிலையில் இப்படி குடிதண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு, மாநகர பகுதிகளில் உள்ள அனைத்து மக்களுக்கும் சீரான முறையில் குடிதண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நெல்லை மாநகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: