மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் ஒரே மாதத்தில் 4 லட்சம் பேர் பயன்: பொது மக்கள் வரவேற்பு.!

சென்னை: மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் ஒரே மாதத்தில் 3 லட்சத்து 99 ஆயிரத்து 817 பேர் பயனடைந்துள்ளனர். இத்திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற மகத்தான திட்டத்தை கடந்த மாதம் 5ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.

45 வயதுக்கு மேற்பட்ட உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்துகளை வீடுகளுக்கே சென்று வழங்குதல், நோய் ஆதரவு மற்றும் இயன்முறை சிகிச்சை சேவைகள் வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்வதற்கு தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்த திட்டத்தில் பெண் சுகாதார தன்னார்வலர்கள் நோய் ஆதரவு சிகிச்சை செவிலியர்கள், இயன் முறை மருத்துவர்கள், இடைநிலை சுகாதார சேவையாளர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். முதற்கட்டமாக 50 வட்டாரங்களில் உள்ள 1,172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 50 மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்களிலும், சென்னை, கோவை, திருநெல்வேலி ஆகிய 3 மாநகராட்சிகளில் 21 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று வரை இத்திட்டத்தின் மூலம் உயர் ரத்த அழுத்த நோய் உள்ள 1 லட்சத்து 76 ஆயிரத்து 440 பேர்களுக்கும், நீரிழிவு நோய் உள்ள 1 லட்சத்து 17 ஆயிரத்து 117 பேருக்கும், உயர் ரத்த அழுத்த மற்றும் நீரிழிவு நோய் உள்ள 80 ஆயிரத்து 280 பேருக்கும் மருந்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 12 ஆயிரத்து 634 பேருக்கு நோய் ஆதரவு சிகிச்சையும், 13 ஆயிரத்து 312 பேருக்கு இயன்முறை சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இது தவிர 34 சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்ள பைகள் வழங்கப்பட்டன. இதுவரை மொத்தம் 4 லட்சத்து 6 ஆயிரத்து 269 பேர் பயனடைந்துள்ளனர். இத்திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் மற்ற பகுதிகளிலும் விரைவில் தொடங்கப்படும் என்று சுகாதார துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: