சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் பறிமுதல்: வாலிபர் கைது

மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.11.48 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் கைப்பற்றி, வாலிபரை கைது செய்தனர். சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை 9.50 மணிக்கு புறப்பட தயாரானது. விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டு அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த ஒரு வாலிபர், சிறப்பு விசாவில் துபாய் செல்ல வந்தார். அவர் ஒரு அட்டை பெட்டி வைத்திருந்தார். அதில் என்ன இருக்கிறது என்று பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டனர். வடாம், அப்பளம் போன்ற உணவு பொருட்கள் இருப்பதாக கூறினார். ஆனால் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த அட்டை பெட்டியை திறந்து பார்த்து பரிசோதித்தபோது, கட்டுக்கட்டாக சவுதி ரியால், யூரோ கரன்சிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அதன் மொத்த மதிப்பு ரூ.11.48 லட்சம். இதையடுத்து பயணியின் பயணத்தை பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்தனர். பின்னர், பாதுகாப்பு அதிகாரிகள் பயணியையும், கைப்பற்றப்பட்ட பணத்தையும் மேல்நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள், பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: