தமிழகத்தில் ஆதிதிராவிடர்- பழங்குடியின ஆணையம்: பேரவையில் சட்டமுன்வடிவு தாக்கல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிமுகம் செய்த சட்டமசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தை தமிழகத்தில் அமைப்பதற்கு வகை செய்யும் சட்டம் இதுவாகும். இந்த ஆணையத்தின் தலைவராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்படுவார். அந்த சமூகத்திற்காக பணியாற்றியுள்ள அதே சமூகத்தைச் சேர்ந்த சிறப்புமிக்க நபர் ஒருவர் துணை தலைவராக நியமிக்கப்படுவார். ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரு பெண் ஆகிய 5 பேர் அதன் உறுப்பினராக நியமிக்கப்படுவார்கள்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் இந்த ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்படுவார். இந்த ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்களின் பணிக்காலம் 3 ஆண்டுகளாகும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உரிமைகள் தொடர்பான புகார்களை இந்த ஆணையம் விசாரிக்கும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொடர்பாக அரசு மேற்கொள்ள வேண்டிய தகுந்த சட்டம் மற்றும் நல நடவடிக்கைகள் தொடர்பாக அரசுக்கு இந்த ஆணையம் ஆலோசனை வழங்கும். விசாரணை நடத்தும் உரிமையியல் நீதிமன்றத்திற்கு உண்டான அதிகாரம், இந்த ஆணையத்திற்கு உண்டு. யாரையும் விசாரிக்க வேண்டுமானால் அவர்களுக்கு அழைப்பாணை அனுப்பி, அவரின் வருகையை கட்டாயமாக்கி, விசாரிக்க ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. இதற்கு வழிவகை செய்வதற்காக சட்ட மசோதா அறிமுகம் செய்யப்படுகிறது.

Related Stories: