தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் நகர்ப்புற ஏழைகளுக்கு 986 குடியிருப்புகள்: ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் நகர்ப்புற ஏழைகளுக்கு 986 குடியிருப்புகள் கட்ட நிதி அளிக்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ஏழைகள் மற்றும் குடிசை பகுதியில் வசிப்பவர்களுக்கு வீடு கட்டும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மத்திய, மாநில அரசு நிதியின் கீழ் பல்வேறு பகுதியில் வீடுகள் கட்டப்பட்டுவருகிறது. இதைத்தவிர்த்து ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் நகர்ப்புற ஏழை எளியவர்களுக்கான நிலைக்கத்தக்க வீட்டுவசதி மற்றும் உறைவிடத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 4 இடங்களில் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதன்படி ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் ரூ.5000 கோடி செலவில் வெள்ளத்தால் பாதிப்பிற்கு உள்ளாக வாய்ப்புள்ள நீர்வழிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் குடியிருப்போர், நகர்ப்புற ஏழை மக்கள் மற்றும் இடம்பெயர்ந்த பணியாளர்களுக்கு வீட்டு வசதியும், மண்டலத் திட்டமிடல் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் முதல் கட்டமாக திருநெல்வேலி, காரைக்குடி, தஞ்சாவூர், பள்ளிப்பாளையம், திண்டுக்கல் மற்றும் தேனியில் ரூ.431 கோடி செலவில் ஆறு துணைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த திட்டத்திற்கு நிதி உதவி அளிக்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக ஒப்பந்தம் சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தாகி உள்ளது. இந்த திட்டத்தில் மொத்தம் 6 ஆயிரம் வீடுகள் கட்டப்படவுள்ளது.இதில் தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் 32 ஆயிரத்து 700 ச.மீட்டர் பரப்பளவில் 986 குடியிருப்புகள் கட்டப்படவுள்ளது. இந்த திட்டத்தின் படி மொத்தம் 13 அடுக்குமாடி குடியிருப்புகளில் 969 வீடுகள் கட்டப்படவுள்ளது. ஒவ்வொரு குடியிருப்பும் தரைத் தளம் தவிர்த்து 5 தளங்கள் அடங்கிய குடியிருப்பாக அமைய உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: