ரூ.7.67 லட்சம் செல்போன்கள் மீட்பு நம்பகமில்லாத இணையதளங்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம்-எஸ்.பி. மணிவண்ணன் பேட்டி

நெல்லை : நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட 51 செல்போன்கள் மீட்கப்பட்டு நேற்று உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன. நம்பகமில்லாத இணையதளங்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என எஸ்.பி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.நெல்லை மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார், பொதுமக்கள் தவறவிட்ட 51 செல்போன்களை மீட்டனர். இதன் மொத்த மதிப்பு ரூ.7.67 லட்சம் ஆகும். அந்த செல்போன்கள் அனைத்தும் நேற்று உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் நெல்லை மாவட்டத்தில் பசுமை சூழலை வளர்க்கும் வகையில் அவர்களுக்கு ஒரு மரக்கன்றும் வழங்கப்பட்டது. செல்போன்களை மீட்க உதவிய சைபர் கிரைம் ஏடிஎஸ்பி சீமைசாமி, இன்ஸ்பெக்டர் ராஜூ, எஸ்ஐ ராஜரத்தினம் அடங்கிய குழுவிற்கு எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார்.

பின்னர் எஸ்.பி. மணிவண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘செல்போன்களை தவறவிடுதல், செல்போன் திருட்டு, வழிப்பறி சம்பந்தப்பட்ட புகார்களில் இதுவரை 315 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு, உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.39 லட்சத்து 74 ஆயிரமாகும். செல்போனில் யாராவது தொடர்பு கொண்டு வங்கி கணக்கு விபரங்கள், ஏடிஎம் கார்டு விபரங்கள், ஓடிபி கேட்டால் பொதுமக்கள் தெரிவிக்க கூடாது. இணையதளம் மூலம் பொருட்கள் வாங்கும்போது கவனமாக வாங்க வேண்டும். நம்பகமான இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

விலை மலிவாக உள்ளது என நம்பகமில்லாத இணையதளங்களை பயன்படுத்த வேண்டாம். முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை கவனமுடன் கையாள வேண்டும். அறிமுகமில்லாத நபர்களுடன் வீடியோ கால் செய்ய வேண்டாம். ஒருவேளை சமூக வலைதளங்கள் மூலமாக பணத்தை இழந்தால், கட்டணமில்லாத எண்ணான 155260க்கு தொடர்பு கொண்டு விபரம் தெரிவிக்க வேண்டும்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் 133 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில் கடந்த ஜூலை 17ம் தேதி வரை 397 பேர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 112 பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியுள்ளோம். 285 நபர்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவர்களை கண்காணித்து வருகிறோம்.

நெல்லை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை ஒழிக்கும் வகையில் 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 111 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 29 ஆயிரத்து 645 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா விற்பனையை ஒழிக்கும் வகையில் 528 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 541 பேர் கைது செய்யப்பட்டு, 6 ஆயிரத்து 107 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கண்காணித்து வருகிறோம்.

விநாயகர் சதுர்த்தி விழாவை பொருத்தவரை தனிநபர்கள் சிலைக்கு வழிபாடு செய்து, சிலையை தனியே சென்று கரைத்து கொள்ளலாம். கூட்டமாக செல்வோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒன்றரை அடிக்கு மேல் விநாயகர் சிலைகளை வைக்க கூடாது. விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் நெல்லை மாவட்டத்தில் 700 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்’’ என்றார்.

போலீசாருக்கு தடுப்பூசி

நெல்லை மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை மொத்தமுள்ள 1842 பேரில் இதுவரை 1710 போலீசார் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டு உள்ளனர். இதில் 1171 பேர் 2வது தடுப்பூசி எடுத்து கொண்டுள்ளதாக எஸ்.பி.  மணிவண்ணன்  தெரிவித்தார்.

Related Stories: