அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் ஆன்லைன் மூலம் மது விற்பனை இல்லை

சென்னை: சட்டப்பேரவையில் மின்சாரத்துறை மானியக்கோரிக்கை மீதான  விவாதத்தில் அதிமுக உறுப்பினர் பி.தங்கமணி(குமாரபாளையம்) பேசியதாவது:  டாஸ்மாக்  அதிகாரி சொன்னதாக ஒரு செய்தி பார்த்தேன். மதுபானங்களை ஆன்லைன் மூலம்  விற்பனை செய்ய கூடாது. இதற்கு பதில் அளித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி கொண்டிருக்கிற இந்த ஆட்சியில் ஆன்லைன் மூலம் மதுபான விற்பனை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை. தமிழகத்தில் 5425 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதில், 3002 மதுக்கூடங்களுடன் இணைந்த கடைகள் உள்ளது. கொரோனா தொற்று காலகட்டத்தில் கர்நாடகாவில் கடைகள் அடைக்கப்படவில்லை.

ஆனால், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை பொறுத்தவரையில் கள்ளச்சந்தையில் விற்கக்கூடிய கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கொண்டு செல்லுதல் மற்றும் விற்பனை செய்வதை ஒழித்தல், வெளிமாநிலங்களில் மதுபானம் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுபான கடத்தலை தடுக்கும் வகையில் 2021ம் ஆண்டில் 11,822  பெண்கள் உட்பட 1 லட்சத்து 29 ஆயிரத்து 676 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், 2.29 கோடி மதிப்பிலான 5.74 லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம். 1.27 கோடி மதிப்பிலான 8.47 லட்சம் லிட்டர் சாராய ஊறல், ரூ.14.78 லட்சம் மதிப்பிலான 55,923 லிட்டர் கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: