தமிழகத்தில் மாதந்தோறும் 2.5 லட்சம் பட்டா கேட்கும் விண்ணப்பங்களுக்கு தீர்வு: நில அளவை ஆணையர் பதில் மனு

மதுரை:  பட்டா வழங்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் பலர் தாக்கல் செய்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நிலுவையில் உள்ள  பட்டா விண்ணப்பங்கள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய நில அளவை ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை நில அளவை ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 1.10.2020 முதல் 31.3.2021 வரை பட்டா கேட்டு 8,81,269 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 8,62,787 விண்ணப்பங்களின் மீது தீர்வு காணப்பட்டது. 98% விண்ணப்பப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது 5.95 லட்சம் பட்டா விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. மாதந்தோறும் 1.5 லட்சம் விண்ணப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில் நில அளவைத்துறையில் பணியாளர்கள் உள்ளனர். நிலுவையில் விண்ணப்பங்கள் மீது 6 மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மாதம் 2.50 லட்சம் பட்டா விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்படும். பட்டா பணிக்கு கூடுதலாக நூறு உரிமம் பெற்ற நில அளவையர்களை ஈடுபடுத்த ரூ.2.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது அமலுக்கு வந்தால் கூடுதலாக மாதம் 10 ஆயிரம் பட்டா விண்ணப்பங்களுக்கு தீர்வு காண முடியும்.

டிஎன்பிஎஸ்சி மூலம் 440 நில அளவையர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இவர்கள் நவம்பர் மாதத்திலிருந்து பணியில் ஈடுபடுத்தப்படுவர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, நில அளவை ஆணையரின் பதில் மனு ஏற்கப்படுகிறது. 3 வாரத்தில் நில நிர்வாக ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். 2021 ஜூலை மாதம் முடிய பட்டா விண்ணப்பங்களின் நிலுவை, தீர்வு காணப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை செப்.13க்கு தள்ளி வைத்தார்.

Related Stories: